மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

குப்பையில் வீசப்பட்ட முதியவர்!

குப்பையில் வீசப்பட்ட முதியவர்!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனாதை முதியவர் ஒருவரை மருத்துவமனைக்கு வெளியே இழுத்து வந்து குப்பையில் வீசிய அவலம் நடந்திருக்கிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் மொழி தெரியாத முதியவர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஓரளவு நடமாடும் நிலையில் இருந்திருக்கிறார். வயோதிகம் மற்றும் நோயின் தாக்கம் காரணமாக நாளுக்கு நாள் முதியவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உதவிக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறார். எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அவரைச் சுத்தம் செய்யவோ, மாற்று உடைகள் அணிவிக்கவோ யாருமற்ற பரிதாபமான நிலை. இதனால் பெரியவரைச் சுற்றி ஈ மொய்த்து நாற்றமடிக்கத் தொடங்கியது.

இது குறித்து மற்ற நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறியிருக்கிறார்கள். மருத்துவமனை பணியாளர்களுக்கும் முதியவரைப் பராமரிப்பது சிரமமாக இருந்திருக்கிறது. இதனால் இன்று (12.10.2017) காலை, மருத்துவமனை ஊழியர்கள் அந்த முதியவரை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே இழுத்து வந்து அங்குள்ள குப்பை மேட்டில் அவரைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பெரியவர் குப்பை மேட்டில் ஆதரவற்றுக் கிடக்க, இந்தச் செய்தி ஊருக்குள் பரவியது. இதைப் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதனால் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் அந்த முதியவரை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்துவருகின்றனர்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon