மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ப்ளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்த பெங்களூரு!

ப்ளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்த பெங்களூரு!

ப்ரோ கபடி லீக் தொடரின் 119ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, தபாங் டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது .

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதல் 10 நிமிடங்கள் இரு அணியினரும் நிதானமாக ஆடினர். பெங்களூரு அணிக்கு அஜய் ரைடுகள் மூலம் புள்ளிகளைச் சேகரித்தார். டெல்லி அணி போனஸ் புள்ளிகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. பெங்களூரு அணி, அஜய்யின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது. டெல்லி அணிக்கு ரோஹித் பலியான், ஸ்ரீராம் புள்ளிகளைப் பெற்ற போதிலும் பின்தங்கியே இருந்தது. சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி, முதல் பாதி முடிவில் டெல்லியை ஆல் அவுட் செய்து 17-9 என முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியை முன்னிலையுடன் துவங்கிய பெங்களூரு அணிக்கு அஜய், ரோஹித் குமார் அதிரடியாக ஸ்கோர் செய்யத் தொடங்கினர். டெல்லி அணிக்கு ரோஹித் பலியான், ஸ்ரீராம் சிறப்பாக ஆடி 24வது நிமிடத்தில் 14-20 என்ற புள்ளி கணக்கை பெற்றுத் தந்தனர். அதன் பின் டெல்லி அணி வாழ்வா சாவா ஆட்டதுக்கு மாறியது. தொடர்ந்து ஆடிய டெல்லி, பெங்களூரு அணியை ஆல் அவுட் செய்து, 27-30 என முன்னிலையைக் குறைத்தது. கடைசி நிமிடத்தில் சுதாரித்துக்கொண்ட பெங்களூரு அணி, இறுதியில் 35-32 என அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது.

இதன் மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீல்ர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஹரியானா அணி, 37-27 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 20 ஆட்டங்கள் ஆடியுள்ள அந்த அணி 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யுபி யோதா (இரவு 8 மணி)

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon