மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

மதுபாலாவை ஈர்க்கும் கதை சொல்பவர் யார்?

மதுபாலாவை ஈர்க்கும் கதை சொல்பவர் யார்?

ரோஜா திரைப்படத்தில் புதுவெள்ளை மழை பாடலில் குளிரில் நடுங்கிய படி வெட்கப்படும் மதுபாலாவை தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலெல்லாம் முத்திரை பதித்த அவர், மும்பையில் செட்டிலான பின் நீண்ட நாள்கள் கழித்து சென்னை வந்துள்ளார். மணிரத்னம், அரவிந்த் சாமி, சென்னை வாழ்க்கை, எதிர்கால திட்டங்கள் என பல விஷயங்கள் குறித்து TOI-க்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

“எனது தோழிகளான ரேகா, குயினி ஆகியோர் சென்னைக்கு கிளம்புவோம் என்று சொன்னவுடன் உடனே கிளம்பி வந்துவிட்டேன். சென்னை வர எனக்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை” என்று கூறிய மதுவிடம் சென்னையை மிஸ் பண்ணுகிறீர்களா என்று கேட்ட போது, “சென்னையின் மண்வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். உலகில் பல்வேறு நகரங்களின் ஹோட்டலில் தங்குவதைவிட சென்னையில் தங்குவது சிறப்பானது. சொந்த வீட்டில் தங்குவது போன்ற உணர்வை தரும். எனது தோழி ரம்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பித்தோம். குடும்பத்தோடு கோவில்களுக்குச் சென்று வந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரோஜா படம் 25 வருடங்கள் நிறைவு செய்ததையொட்டி சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. இது குறித்து கேட்கப்பட்டபோது, “மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதாவது மணி சாருக்கு மெசேஜ் அனுப்புவேன். அவரோடு பணியாற்ற எப்போதும் தயாராக இருப்பதாக நினைவு படுத்திக்கொண்டே இருப்பேன். அரவிந்த்சாமியின் தனி ஒருவன் படம் மிகவும் அருமையாக உள்ளது. நல்லவர், கெட்டவர் எல்லாம் உருவத்தை பார்த்து அல்ல செயல்களிலேயே வெளிப்படுகிறது என்பதை பதிவு செய்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாயை மூடி பேசவும் படத்திற்கு பின் தமிழில் எந்த படத்திலும் இணையாதது குறித்து கேட்ட போது, “எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை என்னை ஈர்க்கும்படியாக அமையவில்லை. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களோடு, குறிப்பிட்ட நடிகர்களோடு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றே நினைத்திருந்தேன். அப்போது தான் என் நண்பர் ஒருவர், இப்போது குறைந்த பட்ஜெட்டில் தான் நல்ல படங்கள் உருவாகின்றன, அவை நல்ல கதையம்சத்துடனும் நல்ல கதாபாத்திர உருவாக்கத்துடனும் வருகின்றன என்று கூறினார். தற்போது நான் திறந்த மனதுடன் கதைகளை கேட்டுவருகிறேன்” என்று கூறியுள்ளார்.

விரைவில் நல்ல கதையம்சம் உள்ள ஒரு தமிழ் படத்தில் மதுபாலாவை எதிர்பார்க்கலாம்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon