மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

தீபாவளி: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!

 தீபாவளி: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!

சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருகின்ற 18ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடவுள்ள நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசைத் தடுக்க, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்குப் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொதுமக்கள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளைக் கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. மற்ற நேரங்களில் 125 டெசிபல் அளவுக்குக் கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்கி வெடிக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசுத் தயாரிப்பாளர்கள், பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப் பொருட்கள், வெடித்தால் எழும் ஒலி அளவின் விவரம் ஆகியவற்றை, பேக்கிங் செய்யப்பட்ட பெட்டியில் குறிப்பிட வேண்டும். மக்கள் அனைவரும் குடும்பம், நண்பர்கள், அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடுமாறும், ஒலி மற்றும் காற்றுமாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து, வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியைக் கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளியன்று சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்றுமாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon