மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

'நாகேஷ் திரையரங்கம்' சிக்கல் தீர்ந்தது!

'நாகேஷ் திரையரங்கம்' சிக்கல் தீர்ந்தது!

‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி, நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆரி, அஷ்னா சவேரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. ஒரு திரையரங்கை மையமாகக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஐசக் இயக்கியுள்ளார். டிரான்ஸ் இந்தியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு தடை கோரி, நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனந்த்பாபு தாக்கல் செய்த மனுவில், "என்னுடைய தந்தை நாகேஷ், சென்னை தியாகராயநகரில் நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக தியேட்டர் நடத்திவந்தார். இந்தநிலையில், டிரான்ஸ் இந்தியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படம் எடுத்துவருகிறது. பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. எங்கள் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல், எனது தந்தையின் பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (அக்.11) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். முடிவில், படத் தயாரிப்பு நிறுவனம் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் தான் படத்தை எடுத்துள்ளது. மனுதாரரின் தந்தை, ‘நாகேஷ் தியேட்டர்’ என்ற பெயரில்தான் தியேட்டர் வைத்திருந்திருக்கிறார். எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon