மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டெல்லி விசிட்: ஓ.பன்னீர் மீண்டும் தனி ஆவர்த்தனம்!

டெல்லி விசிட்: ஓ.பன்னீர்  மீண்டும் தனி ஆவர்த்தனம்!

தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அக்டோபர் 12ஆம் தேதி அவர் பிரதமர் மோடியைச் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

அதிமுகவில் இரு அணிகளாக இருந்த எடப்பாடி அணியும் ஓ.பன்னீர் அணியும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாக இணைந்தன. உடனடியாக ஓ.பன்னீர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். மேலும் அவரது அணியைச் சேர்ந்த மாஃபா. பாண்டியராஜன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இரு அணிகளும் இணைந்தாலும் பொதுக்குழு என்பது அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரிலேயே நடந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் அணியின் முக்கியஸ்தரான கே.பி.முனுசாமிக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படாததால் வெளியேறினார். அதற்குப் பின்னர் ஓ.பன்னீர் ஆதரவாளரான மைத்ரேயனும் அதிருப்திக்கு உள்ளாகி தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது சகாக்களான பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோரோடு டெல்லிக்குப் புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

துணை முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே பன்னீருக்குக் கோட்டையில் உரிய முக்கியத்துவம் இல்லை என்றும், துறை செயலாளர்கள் அவரை கண்டுகொள்வதில்லை என்றும் அவரது அணியில் இருந்தே புகார்கள் கிளம்பின. அரசு நிர்வாக ரீதியில் இப்படி என்றால், கட்சி ரீதியிலும்கூட ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீருக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. அவரது ஆதரவாளர்களுக்கு இன்னமும் வாக்குறுதியளிக்கப்பட்டபடி கட்சிப் பதவிகள் கொடுக்கப்படவில்லை. இணைந்தாலும், தண்ணீரும் மண்ணெண்ணெயுமாகவே இருக்கிறார்கள் பன்னீரும் எடப்பாடியும்.

இந்த நிலையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லிக்குத் தனது அணியோடு சென்று தனி ஆவர்த்தனத்தை மீண்டும் வாசித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடிமீது டெல்லியில் பிரதமரைச் சந்தித்து சில முக்கியமான புகார்களைத் தர இருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது வட்டாரத்திலேயே.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon