மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

முதல்வரைச் சந்தித்த திருமா: அரசியல் பேசினார்களா?

முதல்வரைச்  சந்தித்த  திருமா: அரசியல் பேசினார்களா?

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடியது. மேலும் அரியலூர் அருகே உள்ள குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு டி.டி.வி.தினகரன் சென்றபோது, அங்கு எழுந்த சலசலப்புகளைக் குறைத்து தினகரனைத் தனது தொண்டர் படை மூலம் பத்திரமாக அஞ்சலி செலுத்த வைத்து வழியனுப்பி வைத்தார் திருமா.

மேலும், சில நாள்களுக்கு முன்பு தினகரன் தனது ஆதரவு எம்,எல்.ஏக்களின் சம்பளத் தொகையோடு கட்சி சார்பாக சில லட்சங்கள் சேர்த்து மொத்தம் 15 லட்சம் ரூபாயை அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் கொடுத்தபோது... அவர் தன்னுடன் வருமாறு அழைத்தது திருமாவளவனைதான். இதற்காகவே மதுரையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து குழுமூர் வந்து தினகரனை அனிதா வீட்டுக்கு அழைத்துச் சென்றார் திருமாளவன்.

இப்படி தினகரனோடு கட்சி அரசியல் கடந்து நெருக்கமானவராக கருதப்படும் திருமாவளவன் நேற்று (அக்டோபர் 11) மதியம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், டெங்கு காய்ச்சலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்துமாறு நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில் முதல்வரைச் சந்தித்து இதுபற்றி வலியுறுத்த திருமாவளவன் சார்பில் முதல்வரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டிருந்தது. உடனே முதல்வர் சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார்.

ஆனால் நேற்றுதான் முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் ஏற்பாடாகியிருந்தது. திருமாவளவன் தலைமைச் செயலகம் செல்வதற்கு சற்று தாமதமானதால், முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கோட்டைக்கு திருமாவளவன் சென்றபோது ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலும் காத்திருந்தார். திருமாவளவன் வந்த தகவல் முதல்வருக்குத் தெரியப்படுத்தப்பட அமைச்சரவைக் கூட்டத்தின் இடையே சில நிமிடங்கள் ஒதுக்கி திருமாவளவனைச் சந்தித்தார் முதலமைச்சர்.

சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்று சிறுத்தைகள் வட்டாரத்தில் பேசினோம்.

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வகை செய்யும் சட்டத்தைத் தமிழக அரசு 2006ஆம் ஆண்டு இயற்றியது. இதை எதிர்த்த வழக்கில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசு பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனத்துக்காகப் பத்தாண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இதனிடையில் கேரள அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. அதன்மூலம் சமூகநீதியை நிலைநாட்டுவதில் கேரள அரசு தமிழகத்தை முந்திவிட்டது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று கோரினோம்.

மேலும், இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் சிலவற்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தத் தடைகளைக் களைந்து இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் அனைத்திலும் அனைவரும் சமமாக வழிபாடு செய்யும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராத கோயில்களே தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன. அக்கோயில்கள் பலவற்றில் தலித்துகள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அவை சாதியவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன. அத்தகைய கோயில்களிலும் சமத்துவத்தை நிலைநாட்டிட அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைவரும் வழிபட அனுமதிக்காத கோயில்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் அறங்காவலர் பதவிகளில் தலித் மக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கிட தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். தலித் பகுதிகளில் அந்த மக்களால் கட்டப்பட்டு வழிபாட்டில் இருக்கும் கோயில்களைச் சீரமைத்துப் பராமரித்திட சிறப்பு நேர்வாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதி உதவி அளித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம்” என்றனர்.

முதல்வர் திருமா சந்திப்பில் அரசியல் பேசப்பட்டதா என்ற நம் கேள்விக்கு, “அரசியல் பேசவில்லை. ஆனால், அரசியல் சூழல் பற்றி பேசினார்கள்” என்றனர்.

திருமா சமீபத்தில் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon