மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

விஷால்: காத்திருப்பு - ஏமாற்றம் - தித்திப்பு!

விஷால்: காத்திருப்பு - ஏமாற்றம் - தித்திப்பு!

தமிழ் சினிமா மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. வாரத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ், தமிழக அரசுடன் சுமுகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை என இந்தத் தீபாவளியைத் தித்திப்பான ஒன்றாக எதிர்பார்த்திருந்தது தமிழ் சினிமா. ஆனால், நடைபெற்றது என்ன?

தமிழக அரசு அறிவித்திருக்கும் டிக்கெட் விலைக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்கள் இரண்டு தரப்பினர். தியேட்டர் சென்று சினிமா பார்க்கும் ரசிகர்கள் ஒரு தரப்பு, தியேட்டர் உரிமையாளர்கள் இன்னொரு தரப்பு. இதில் ரசிகர்களின் ஆதங்கம், அதிகப்படியான விலைக்கு டிக்கெட் விற்றால் எப்படி தியேட்டருக்குச் செல்வது என்பது. ஆனால், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை, சென்னை போன்ற நகரங்களுக்கு அறிவித்திருக்கும் விலையையே தமிழகம் முழுவதும் அமல்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என்பது. இதில் விஷால் தரப்பு எந்தப்பக்கம் என்பது தெரியவில்லை. ஆனால், கேளிக்கை வரி விதிப்பில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்டோபர் 11) கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக விஷால் காத்திருந்தார். கடைசிவரை முதலமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் மட்டும் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களும் அரசின் முடிவுகளிலிருந்து பின்வாங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துவிட்டதால் விஷாலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தீபாவளிக்கு எத்தனைப் பெரிய படங்கள் ரிலீஸானாலும், அவற்றுடன் சில சிறிய படங்களாவது போட்டியிடும். ஆனால், இம்முறை எத்தனைப் படங்கள் ரிலீஸாகும் என்று இப்போது வரையில் தெரியவில்லை. மெர்சல் திரைப்படத்தை மட்டும் எப்படிப்பட்ட தடங்கல் வந்தாலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்வோம் என தேனாண்டாள் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி சூளுரைத்துவிட்டார். தியேட்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்யாமல் புறக்கணிப்பது ஆகிய வழிகளைப் பற்றிப் பேசிவருகிறார்கள். அக்டோபர் 9ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்த தியேட்டர் டிக்கெட் விலை அறிவிப்பை இப்போது வரை நடைமுறைக்குக் கொண்டு வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருகிற புதன்கிழமை வரைக்குமான டிக்கெட்டுகளில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. மெர்சல் திரைப்படம் பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியிருப்பதால் இந்தப் படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள அரசு, தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் முயன்று வருகிறார்கள்.

அரசுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட விஷாலின் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்ற செய்தி வெளியான சமயத்திலேயே, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தீபாவளிப் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாகத் தீபாவளிக்கு வழங்கப்படும் பட்டாசு, இனிப்புப் பொட்டலங்களுக்குப் பதிலாக பத்தாயிரம் ரூபாயை நேரடியாக தயாரிப்பாளர்களின் அக்கவுன்ட்டுக்கு அனுப்பிவிட தீர்மானித்திருக்கிறார்கள். இதன்படி, பரிசுத் தொகை பெற விரும்பும் தயாரிப்பாளர்கள் தங்களது சங்க அடையாள அட்டை, அக்கவுன்ட் நம்பர் மற்றும் காசோலை ஆகியவற்றை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நேரில் வர இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் இவற்றை அனுப்பலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

விஷாலின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, “ஏன் சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்க தயங்குகிறார்கள்?” என்ற கேள்விக்குரல் சங்க உறுப்பினர்களிடையே உருவாகத் தொடங்கிவிட்டது. தீபாவளி போன்ற நாள்களில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சந்திப்பதும், குறைகளையும் நிறைகளையும் பேசி ஆராய்வதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு என்பதாலும், விஷால் தலைவராகப் பொறுப்பேற்று இது முதல் தீபாவளி என்பதாலும் அந்நாளை எதிர்நோக்கிக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பில் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாட உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தித்திக்கும் தீபாவளியாக இருந்தாலும், அரசு அறிவித்த டிக்கெட் விலையை ஏற்று தியேட்டர்கள் ரிலீஸானாலும், மெர்சல் திரைப்படம் எவ்விதப் பிரச்னையுமின்றி ரிலீஸாகி வெற்றி பெற்றாலும் தற்போதைய பிரச்னையால் பாதிக்கப்படப் போவது நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு ஓடும் அந்த சினிமா ரசிகன் மட்டும்தான்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon