மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிறப்புக் கட்டுரை: கண்பார்வை இல்லாமல் உலகை வென்ற பெண் - ஹெலன் கெல்லர்

சிறப்புக் கட்டுரை: கண்பார்வை இல்லாமல் உலகை வென்ற  பெண் - ஹெலன் கெல்லர்

இருட்குகையான பூமிக்குள்ளே

புதையுண்டிருந்தாலும்கூட

உச்சிமரத்தின் கொண்டாட்டப் பரவசத்தில்

பங்கேற்கின்றன, வேர்கள்.

சூரிய ஓளியையும்,

விசாலமான காற்றையும்

இயற்கையின் கருணையால்

அனுபவிக்கின்றன, வேர்கள்,

என்னைப் போலவே!

- ஹெலன் கெல்லர்

1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி Kate Adams Keller மற்றும் Arthur H. தம்பதியருக்கு மகளாக பிறக்கிறார் Helen Adams Keller. பிறந்து 19 மாதங்களே ஆன நிலையில், கடும் ஜுரத்தால் தாக்கப்பட்டு, கண் பார்வை இழக்கிறார். காதும் கேட்காமல் போகிறது. ஏழு வயதில், ஆசிரியர் சல்லிவன் அவர்களின் துணையால், விரல் நுனி எழுத்துகளையும், 625 வார்த்தைகளையும் கற்கிறார். 10 வயதில், Brailleயை முழுமையாகக் கற்கிறார். தட்டச்சு இயந்திரத்தை உபயோகிக்கவும் கற்கிறார். 16 வயதில், பள்ளி கல்லூரி போகும் அளவுக்கு அவருக்குப் பேசத் தெரியும். 1904இல், Radcliffe கல்லூரியில் பட்டப்படிப்பை முடிக்கிறார். அவரது பள்ளி கல்லூரி வாழ்வு முழுவதும், ஆசிரியர் சல்லிவன் அவருடனே இருந்து வந்தார். பிறர் பேசுவதை அவரிடம் தெரிவிப்பது சல்லிவன் அவர்கள்தான். அந்த குட்டிப் பெண் ஹெலன், வரலாற்றை அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார். தனது வாழ்வை கண் பார்வையற்றோருக்காகவும் காது கேளாதவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறார். ஐந்து கண்டங்களில், 25 நாடுகளுக்குச் சென்று பேசி இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் நம்பிக்கையையும் தைரியத்தையும் விதைத்துச் சென்றார். இன்று உலக கண்பார்வை தினம். கண்பார்வை இல்லாமல் உலகை வென்ற ஒரு பெண்ணைப் பற்றி சில தகவல் துணுக்குகள்:

• ஹெலனின் சிறந்த நண்பர்கள் புத்தகங்கள்.

• அவரது சுயசரிதையான The Story Of My Life என்ற புத்தகத்தை, அவர் இளங்கலைப் படிக்கும்போதே எழுதிவிட்டார். அதாவது 23 வயதில். இது ஒரு பெண்கள் இதழில் தொடராக வந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இதுதவிர, 12 நூல்களையும் எழுதியுள்ளார் ஹெலன். பெண்ணுரிமை, பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி அதிகமாக பேசவும் எழுதவும் செய்தார்.

• அவர் சென்ற நாடுகளில் எல்லாம், ‘ஹெலன் கெல்லர் நிதி’ என்னும் தலைப்பில் நிதி திரட்டினார்.

• அமெரிக்க சோஷலிசக் கட்சியில் உறுப்பினராக இருந்தார் ஹெலன்.

• பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கினார்.

• இந்திய தேசிக் கீதம் எழுதிய தாகூரை, இந்தியா வந்தபோது சந்தித்தார்.

• ஹெலனுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அதிசயமாக இருக்கிறதா? இவரது விரல் நுனிகளால் இசையின் அதிர்வை உணர்ந்து ரசிக்கும் திறனைப் பெற்றார்.

• சாரா ஃபுல்லர் என்னும் ஆசிரியை அவருக்கு உதட்டசைவுகளைக் கொண்டு உச்சரிக்கும் முறையைக் கற்பித்தார்.

• 13 வயதில் நயாகரா அருவியைப் பார்க்கச் சென்ற ஹெலனால் அதைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியர் சல்லிவனின் உறுதுணையால், அருவியின் அதிர்வை வைத்து, மனக்கண்ணால் மாபெரும் அருவியைக் கண்டார் ஹெலன்.

• Mark Twain இவரது சிறந்த நண்பர்.

• பல்வேறு துறைகளில் ஹெலனுக்கு இருந்த அறிவையும், அவரது அயராத உழைப்பையும் கண்டு டெம்பிள் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ பல்கலைக்கழகம், இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகம், தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகம் ஆகிய பல பல்கலைக்கழகங்கள் இவருக்குப் பட்டங்களை அளித்து பெருமைப்படுத்தின.

• கண்பார்வை இல்லாத, காது கேளாமல் பட்டப்படிப்பை முடித்த முதல் நபர் ஹெலன் கெல்லர்.

• பத்து வயது நிறைவதற்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார்.

• 1953இல், அமைத்திக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.

• ஹெலன் மற்றும் ஆசிரியை சல்லிவன் ஆகியவரின் உறவு 49 ஆண்டுகாலம் நீடித்தது.

• பொருள்களை இவரது கைகளில் கொடுத்தும், மரம், செடி கொடிகளைத் தொடச் செய்தும் அவற்றின் பெயர்களைக் கையில் எழுதியும் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது.

• ஹெலனின் வாழ்வில் காதல் பூத்தது. ஆசிரியை சல்லிவன் ஓய்வுக்காக சென்றிருந்த வேளையில் ஹெலனின் எழுத்துப்பணியில் உதவ பீட்டர் ஃபேகன் என்னும் இளம் எழுத்தாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்தனர். இந்த நிலையில், ஹெலனின் வீட்டோர் அக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பீட்டர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார். பிறகு, பீட்டர் ஹெலனின் வாழ்க்கையிலிருந்து காணாமல் போய்விட்டார். தன் காதல் வாழ்க்கையைப் பற்றி ஹெலன், “என் தனிமையைப் போக்க வந்த சூரியன் அவன், இருள் நிறைந்த கடலில் மகிழ்வோடு இளைப்பாறக் கிடைத்த சிறு தீவு என் காதல்”, எனக் குறிப்பிடுகிறார்.

• 1965இல் இவர் ஆசியச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 40,000 மைல்கள் தூரத்தையும், ஐந்து மாத கால அவகாசத்தையும் கொண்ட மிக நீண்ட, கடின பயணத்தை மேற்கொண்டபோது அவரது வயது 75.

• ஜப்பானிய அகிதா எனும் நாய் இனத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது ஹெலன். இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

• ஓர் அமெரிக்க குடிமகன் பெறும் மிக உயர்ந்த கௌரவமான Presidential Medal of Freedomஐ பெற்றிருக்கிறார்.

• Helen Keller in Her Story என்ற கதைக்காக, 1956ஆம் ஆண்டில் சிறந்த ஆவணத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ஹெலன்.

• பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 1968இல் அவர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

- ந. ஆசிபா பாத்திமா பாவா

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon