மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

உலக கண்பார்வை தினம்!

உலக கண்பார்வை தினம்!

உலக சுகாதார நிறுவனம், கண் பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு பற்றி உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை ‘உலக கண்பார்வை தினம்’ ஆகக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 12ஆம் தேதி) உலக கண்பார்வை தினம். ஆண்டுதோறும் இந்த நாள், ஒரு குறிக்கோளை முன்னிறுத்தி அந்த ஆண்டு அதை நிறைவேற்ற செயல்படுகிறது. கடந்த ஆண்டு Stronger Together, அதாவது கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகள், நிபுணர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தால் கண்பார்வை சம்பந்தமான நோய்களைத் தடுக்கலாம், குணப்படுத்தலாம் என்று கருதி அந்த திட்டத்தில் கடந்த ஆண்டு அனைத்து நாடுகளும் செயல்பட்டன. இந்த ஆண்டுக்கான திட்டம், “Make Vision Count”. ஒவ்வொரு கண்பார்வையும் மகத்தானது. நம் கண்ணை நாம் பாதுகாப்பதோடு, கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவி செய்தலும் நம் குறிக்கோளாக வேண்டும்.

தற்போதைய சூழலில் 80% பேர், அதாவது 5இல் 4 பேர் கண்பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 6.7% பேர் பார்வைக் குறைபாட்டினாலும் 1.1% பார்வையின்மையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். (http://atlas.iapb.org/gvd-maps/#AllAges). உலகளவில், சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் வங்காளம் ஆகிய இந்த தேசங்களில் மட்டும் 45% பேர் Diabetic Retinopathy எனும் நீரிழிவு சம்பந்தமான கண்பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள்தொகையில் 8.5%, அதாவது 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1980இல் வெறும் 108 மில்லியன் மக்களே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 30 ஆண்டு காலத்துக்குள் அதிவேகமாக இப்பிரச்னை வளர்ந்துள்ளது. சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை diabetic retinopathy மற்றும் cataract, glaucoma போன்ற கண் சம்பந்தப்பட்ட குறைபாட்டுக்கு முக்கியமான காரணிகள். 20 - 65 வயதினருக்கு அதிகமாக இப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

2010ஆம் ஆண்டில் 2.6% பேருக்கு diabetic retinopathy ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் என்கிறார்கள் நிபுணர்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களில் 75% பேருக்கு 15 ஆண்டுகளில் இக்குறைபாடு வரும் வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல், தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவற்றால் இக்குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். (http://atlas.iapb.org/vision-trends/diabetic-retinopathy/)

Diabetic Retinopathy (DR) எனும் நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை.

அடுத்ததாக விசுவரூபம் எடுத்துள்ள பிரச்னை myopia எனப்படும் கிட்டப்பார்வை. நாம் காணும் 10 பேரில் 9 பேர் கண்ணாடி அணிந்து இருப்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். கண்ணாடி அணியாதவர்களை பார்ப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது. கண்ணாடிக்கு மாற்றாக லென்ஸ் வந்தாலும், இதே நிலைதான். பார்வைக் குறைபாடுடைய மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய சூழலில் ஏறத்தாழ 50% மக்கள் நகர்ப்புறத்தில் வாழ்கிறார்கள். 2050ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 70% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் நாம் காணும் வயல்வெளிகள், மலைகள் போன்ற காட்சிகளை அங்கு வசிக்கும் மக்கள் காண்பதில்லை. மாறாக கணினி, கட்டடங்கள், மொபைல், வாகனம், கூட்ட நெரிசல் ஆகிய காட்சிகளிலேயே அவர்கள் நாள்கள் நகர்கின்றன. குழந்தைகளுக்கு இது ஒரு பெரும் சவாலாகவே விளங்குகிறது. இவர்களுக்கான வெளிப்புறக் காட்சிகள் மிகவும் குறைவு. அதனால், இவர்களுக்கு பார்வைக் குறைபாடு, முக்கியமாக கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். 2010ஆம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 28% பேர் மட்டுமே கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது 2020ஆம் ஆண்டு 34% ஆகவும், 2050ஆம் ஆண்டு 50% ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில், 17 வயதுக்குட்பட்ட 70% கிட்டப்பார்வை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணின் நீளத்துக்கும் அதன் ஒளியியல் சக்திக்கும் (Optical Power) இடையேயான மாறுபாட்டினால் குழந்தைப் பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்படுகிறது. பொதுவாக கண்ணாடி மற்றும் contact lens அணிவிக்கப்பட்டு இப்பிரச்னை சரிசெய்யப்பட்டாலும் -5.00D அல்லது அதற்கும் மேலான அளவில் குறைபாடு இருந்தால், பிரச்னை மிகவும் பெரிதாகிறது. Retinal detachment, Cataract, Glaucoma போன்ற தீவிரமான பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

Myopic Macular Degeneration எனப்படும் பாதிப்பு, ஆசியாவில் அதிகமான மக்கள் பார்வையிழக்க காரணமாக இருக்கிறது. தனிநபர்களையும் சமூகத்தையும் அதிகளவில் பாதித்துவரும் இந்த கிட்டப்பார்வை பிரச்னையைத் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சை வழிமுறைகளிலும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சீனா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் நடந்த ஆராய்ச்சியில், தொடக்கப்பள்ளி மாணவர்களை 40 முதல் 80 நிமிடங்கள் தினசரி வெளியில் செயல்பட விடுவதால், 23%-50% வரை கிட்டப்பார்வை குறைக்கப்படலாம் எனக் கண்டறிந்து இருக்கின்றனர். மயோபியா சுமையை நிர்வகிப்பதில், தொடக்க நிலை மற்றும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளைத் தீர்மானிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், ஓர் ஒருங்கிணைந்த முயற்சியும் சுகாதார மேம்பாடுகளும் முறையான நிர்வாகமும் தேவைப்படுகிறது. (http://atlas.iapb.org/vision-trends/myopia/)

கண் சுகாதார விழிப்புணர்வில் ‘உலக கண்பார்வை தினம்’ மிகவும் முக்கியமான நாளாகும். அனைவரிடமும் மருத்துவ முறைகளையும், பரிசோதனைகளையும் குறித்து தெரிவிப்பதற்கு நாம் அனைவரும் முயல வேண்டும். உயிரற்ற உடல் தீக்கிரையாகிறது அல்லது மண்ணில் மக்கி மண்ணாகவே போகிறது. சமூகக் கட்டுப்பாடுகளாலும், மூட நம்பிக்கைகளாலும் கட்டிப்போடப்பட்டிருக்கும் நம் மக்களிடம் அவர்களது அந்த இரு கண்கள் மறு வாழ்வு கொடுக்க வல்லது என்பதைப் புரிய வைக்க வேண்டும். குணப்படுத்தக்கூடிய பார்வை பிரச்னைகளைக் குணப்படுத்தவும் நாம் உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு பார்வையும் விலை மதிப்பில்லாதது; மகத்தானது.

- ந. ஆசிபா பாத்திமா பாவா

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon