மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஜி.வி & ஷாலினி - டாம் & ஜெர்ரி!

ஜி.வி & ஷாலினி - டாம் & ஜெர்ரி!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகவிருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் நேற்று (அக்.11) பூஜையுடன் தொடங்கியது.

நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூல் ரீதியான வெற்றியையும் பெற்ற ‘100% லவ்’ படம், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ளார். நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். நாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், ரேகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எம்.எம்.சந்திரமெளலி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக விநாயகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்த தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

‘புரூஸ் லீ’ படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வமும் தாள மயம், கோபம், ரெட்டை கொம்பு என அடுத்தடுத்து படங்கள் உருவாகி வெளியாகத் தயாராகவுள்ள நிலையில், தற்போது 100% காதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படம் குறித்து ஜி.வி,பிரகாஷ், “இந்தப் படத்தைத் தெலுங்கில் பார்த்ததில் இருந்து அதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது. படத்தின் கதை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். விஜய் நடித்த ‘குஷி’ படம் போன்று 100% காதல் படமாகவும் இருக்கும். ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள எம்.எம்.சந்திரமெளலி அவர்கள் இந்தப் படத்தை இயக்குவது படத்துக்கு மிகப்பெரிய பலம். கல்லூரியில் படிப்பவர்கள் மிகவும் ரசிக்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். 100% Love படத்தில் டிஎஸ்பி-யின் இசையில் பாடல்கள் எல்லாம் செம ஹிட். அந்த அளவை அடைவது என்பது எனக்கு ஒரு சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இந்த ஆண்டு ஒரு படம் மட்டுமே வெளிவந்திருப்பது குறித்து அவர், “நான் சரியான இடைவெளிகளில்தான் படம் நடிக்கிறேன். ஆனால், அவை வெளியாவதில் கால தாமதமாகிறது. எல்லா படங்களும் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த கால தாமதம். இந்த ஆண்டில் இதுவரையில் என் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும்” என்றவர், “ரீமேக் படங்களில் நடிக்கும்போது அதன் ஒரிஜினல் படத்துடன் ஒப்பிடுவது இயல்பான ஒன்றுதான். 100% காதல் மட்டுமல்ல, என்னுடைய முதல் படமான டார்லிங் படமும் ‘பிரேமா கதா சித்ரம்’ படத்தின் ரீமேக் தான். ஒரிஜினல் படத்தை ரீமேக் செய்யும்போது அதை எப்படி பாசிடிவ்வாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றுகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென நடிகை லாவண்யா திரிபாதி இந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில், கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் குறித்து ஷாலினி, “எனக்குத் தமிழ்த் திரையுலகம் குறித்து எதுவுமே தெரியாது. இருந்தாலும், என் மீதுள்ள நம்பிக்கையில் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஜி.வியுடன் ஜோடியாக நடிக்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன். தமிழ், தெலுங்கு இரண்டுமே எனக்குப் புதிதுதான். சினிமாவில் இப்போதுதான் ஏ,பி,சி,டி கற்றுக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

கவர்ச்சியாக நடிப்பது குறித்து அவர், “இங்கு கவர்ச்சி என்று ஏதுமில்லை. நடிப்பு மட்டும்தான். நடிப்பில் ஓர் அங்கம்தான் கிளாமர். எனவே, நான் நடிப்பு ஒன்றில் மட்டும்தான் முழுமையாக கவனம் செலுத்துகிறேன். அர்ஜுன் ரெட்டி படத்தில் வரும் என்னுடைய ‘ப்ரீத்தி’ கதாபாத்திரமும் இந்தப் படத்தில் வரும் ‘மகாலக்ஷ்மி’ கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டது. இந்தப் படத்தின் கதை ‘டாம் & ஜெர்ரி’ எப்படி சண்டை போட்டுக்கொள்வார்களோ அதுபோன்று ஹீரோவும், ஹீரோயினும் சண்டை போட்டுக்கொள்வர்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

100% காதல் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் எம்.எம்.சந்திரமெளலி, “இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய கதை உரிமையை எனக்கு வழங்கியதோடு, இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் சுகுமார் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கவுள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகவுள்ள இதை அனைவரும் நிச்சயம் ரசிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதை இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018 கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon