மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

மீண்டும் மிரட்டும் யஷ்வந்த் சின்ஹா!

மீண்டும் மிரட்டும் யஷ்வந்த் சின்ஹா!

அமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாப்பதன் மூலம் பாஜக தனது நன்மதிப்பை இழந்துவிட்டதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் வர்த்தகம் , பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து 2015-16ஆம் ஆண்டில் ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளதாக ‘தி வயர்’ இணைய நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் பலவும் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்த விவகாரத்தில் பாஜகவின் நன்மதிப்பு போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஜெய் ஷாவுக்குக் கடன் வழங்கப்பட்ட முறை மற்றும் அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசிவருவது, ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உணர்வைத் தருகிறது. ஒரு தனி நபருக்காகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது கிடையாது.

மத்திய அரசின் பல அமைச்சகங்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால், மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக நன்மதிப்பை இழந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசு வழி வகுத்துவிட்டதாகவும் பிரதமர் மோடியும் அருண் ஜெட்லியும்தான் இதற்குக் காரணம் என்றும் யஷ்வந்த் சின்ஹா கட்டுரை ஒன்றை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon