மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் - பியூட்டி ப்ரியா

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் - பியூட்டி ப்ரியா

“தரை தட்டித்தவழும் உன் கூந்தலழகை கண்ட பின்னர்தான் மண்ணும் மோட்சம் அடைந்தது...” (கொஞ்சம் ஓவராத்தான் போறாய்ங்க) இது போன்ற கவிதைகளில் படித்தால்தான் உண்டு, அவ்வளவு நீள கூந்தலைப் பற்றி தெரிந்துகொள்ள. இக்காலத்தில் பராமரிக்க இயலாத காரணத்தினாலும், போதுமான ஊட்டச்சத்தின்மையினாலும் முடிகளைக் குறுகலாக வெட்டிக்கொள்கின்றனர்.

சரி, இருக்கும் கூந்தலையாவது காப்போம் வாருங்கள்.

கூந்தல் நன்கு வளர / முடி உதிர்வதை தடுக்க

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

* ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்க வழக்கம்.

* மன உளைச்சல், கோபம், படபடப்பு.

* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.

* கூரிய முனைகள்கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

முடி உதிர்வது நிற்க வேண்டுமா?

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருள்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால்தான் முடி உதிர்கிறது. உதாரணமாக - மீன், இறைச்சி, முட்டை, மரக்கறி வகைகள், பழ வகைகள்.

முடி உதிர்வதைத் தடுக்க சில எளிய முறைகள்

* வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் செய்துவந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது. அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

* நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப்பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டிவிட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பூ போட்டு நன்கு அலசிவிடுங்கள். ஷாம்பூ தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்

என்னவளின் தலை முடியாக இருக்க ஆசை எனக்கு

ஏனென்றால் அவளின் கைகளின்

அரவணைப்பில் வாழலாமே என்று.

(பேன் இல்லாமலும் சவுரி முடியாகவும் இல்லாமல் இருந்தால் சரி) என்று கூறி தலைக்குச் சாம்பிராணி போட சென்று கொண்டிருப்பது உங்கள் பியூட்டி ப்ரியா.

பியூட்டி ப்ரியா 01

பியூட்டி ப்ரியா 02

பியூட்டி ப்ரியா 03

பியூட்டி ப்ரியா 04

பியூட்டி ப்ரியா 05

பியூட்டி ப்ரியா 06

பியூட்டி ப்ரியா 07

பியூட்டி ப்ரியா 08

பியூட்டி ப்ரியா 09

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon