மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அம்மா: 50% இட ஒதுக்கீடு வேண்டும்!

அம்மா: 50% இட ஒதுக்கீடு வேண்டும்!

WCC அமைப்பு Women in Cinema Collective என்ற விரிவாக்கத்துடன் கடந்த மே 18ஆம் தேதி நடிகைகளின் மூலம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு AMMA (அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட்) என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு தற்போது கேட்பது AMMA அமைப்பில் 50% இடம்.

மிகவும் குறைவான பெண்கள் மட்டுமே நிர்வாகத்தில் இடம்பெற்றிருப்பதாலும், ஆண்கள் பலரும் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதாலும்தான் சினிமாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பது WCCஇன் குற்றச்சாட்டு. இதை உண்மையாக்குவது போலவே, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நடிகர் திலீப் ஜூன் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக AMMA அமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்போது அவர் நிரபராதியாக இருந்தால் விடுதலையடைவதும், குற்றவாளியாக இருந்தால் தண்டனை பெறுவதும் உண்மையைப் பொருத்தது. ஆனால், அனைத்துக்கும் முந்திக்கொண்டு AMMA அமைப்பு ஆதரவு கொடுத்தது மலையாளத் திரையுலகிலுள்ள பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதன் விளைவாகவே இன்று AMMA அமைப்புக்கு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில விருதுகள் வழங்கும் விழாவில் WCC அமைப்பைச் சேர்ந்த திரையுலக நடிகைகள் சிறு போராட்டத்தை முன்னெடுத்து, பிப்ரவரி 17 நடிகை கடத்தல் வழக்கை விசாரிப்பதில் வேகம் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் பிறகாகத் தான் அந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு திலீப் கைது செய்யப்பட்டார். எனவே, முதல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது வெற்றியாக AMMA அமைப்பில் சரிபாதி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கின்றனர். இதன் முதல் படியாக நடிகை ரம்யா நம்பீசன் AMMA அமைப்பில் நடிகைகளுக்கு 50% இடம் கேட்டு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். அடுத்த AMMA அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியதன் காரணமாகவே இப்போது இந்தக் கடிதத்தைச் சமர்ப்பித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் ரம்யா.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon