மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிறப்புக் கட்டுரை: காய்ச்சலும் உவத்தலும்!

சிறப்புக் கட்டுரை: காய்ச்சலும்  உவத்தலும்!

போகன் சங்கர்

டெங்கு காய்ச்சல்தான் தமிழ்நாட்டைக் குலுக்கிக்கொண்டிருக்கும் தற்போதைய ‘கிருமிச் செய்தி’.

ஆனால், காய்ச்சல் என்பது வேத காலத்திலிருந்தே பெரிய அச்சுறுத்தும் ஒரு செய்திதான். அதர்வ வேதத்தில் பல மந்திரங்கள் காய்ச்சலை நோக்கிச் சொல்லப்படுகிறவை. ருத்ரன் எனப்படும் சிவன்தான் காய்ச்சலின் அதிபதி. அவன் கோபமுற்றால் புவி மீது ஒன்பது விதமான சுரங்கள் பரவும் என்று சொல்லப்படுகிறது. காய்ச்சலைத் தவிர தொழுநோய், மஞ்சள் காமாலை, கண் நோய்கள் போன்ற சில நோய்களே வேதங்களில் பேசப்பட்டிருக்கின்றன. விவிலியத்தில் அதிகம் அஞ்சப்பட்டது தொழுநோய். அனல் காயும் பாலைவனங்களில் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகள் அதிகம் இல்லாமல் இருந்திருக்கலாம். தொழுநோயர்கள் தனியே வசிக்கும் பெரிய காலனிகள் நகரங்களுக்கு வெளியே இருந்தன.

அதன் பிறகு உலக சரித்திரத்தில் எயிட்ஸ் வரும் வரை மிகவும் அஞ்சப்பட்ட தொற்றும் நோய் சயரோகம் என்று அழைக்கப்படும் காசநோயே. அந்த நோய் பிடித்தவர்களின் எலும்புகள் உருகிச் சளியாக வெளியே வருவதாக நம்பப்பட்டது. மத்திய கால ஐரோப்பாவில் அது அறிவு ஜீவிகளின் உயர் கலாசாரத்தின் நோயாகவும்கூட நீண்ட காலம் கருதப்பட்டது.

காசநோய், புற்றுநோய், இப்போது எயிட்ஸ் போன்ற நோய்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைகளை, கதையாடல்களை எழுத்தாளர் சூசன் சாண்டாக் Illness As Metaphor என்ற நூலில் எழுதியிருக்கிறார். நோயை வேறு எதனுடைய குறியீடாகவோ, உருவகமாகவோ கருதுவது. அது உண்மையில் சிக்மண்ட் பிராய்டின் ஒரு சொற்றொடராகும். புலன் நுகர்ச்சியின் மீது கட்டுப்பாடில்லாதவர்களுக்குத்தான் காசநோய் வருவதாகக் கருதப்பட்டது. புற்றுநோயோ உணர்ச்சிகளை அதிகம் அடக்கிக்கொள்வதால் வரும் ஒரு நோய் என்று சொல்லப்பட்டது.

காய்ச்சல் என்னும் பேரழிவு நோய்

இவை கடும் நோய்களாகக் கருதப்படுகிறவை. ஆனால், உண்மையில் அன்றும் இன்றும் மிகப் பெரிய அழிவை பூமியில் கொண்டுவந்த நோயாகக் காய்ச்சலைத்தான் சொல்ல வேண்டும். இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய அழிவை 1918-19இல் பரவிய ப்ளூ காய்ச்சல் கொண்டுவந்தது. ஏறக்குறைய உலகெங்கும் 50 முதல் 100 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள். ஏறக்குறைய, உலக மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம். இந்தியாவில் 17 மில்லியன் மக்கள். இதனுடன் ஒப்பிடக்கூடிய ஒரே பேரழிவு பிளேக் மட்டும்தான்.

இந்தப் பேரழிவுக் காய்ச்சல்கள் உலக சரித்திரம் முழுவதும் நிகழ்ந்து வந்திருக்கின்றன என்று சில சரித்திர ஆராய்ச்சிகள் கருதுகிறார்கள். சில வரலாற்றுப் புதிர்களை நாம் இதன் மூலம் விளக்க முடியும். மொஹஞ்சதாரோ நாகரிகம் படையெடுப்பினால் அல்ல இதுபோன்றதொரு கொள்ளை நோயினால் அழிந்தது என்று சொல்வதுண்டு. புகழ்பெற்ற நாவலாசிரியர் ஸ்டீபன் கிங்கின் The Stand என்ற நாவல் இது போன்றதொரு காய்ச்சலினால் உலகமே அழிந்து மிகச் சிலரே எஞ்சுவதை அச்சுறுத்தும் விதமாக விவரிக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பன்றிக் காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சல்கள் உலகை அதிகம் பயமுறுத்தி வருகின்றன. வைரஸினால் ஏற்படுகிற காய்ச்சல்களுக்கு, குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு நவீன மருத்துவத்தில் மருந்து எதுவும் இல்லை என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்ற சித்த மருந்துகள் துணை மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

தென்னகத்தில் தமிழகத்தைவிட அதிகம் டெங்குவால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளம். இந்த வருடமும் அங்கே நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நிலவேம்பும் அறிவியல் சோதனைகளும்

சித்த மருத்துவம் உலகின் ஆதிநோய் சுரமே என்கிறது. அவர்களது பாடமே சுரத்தின் வகைகளைச் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது. அவர்கள் இதைப் பித்த சுரம் என்று வகைப்படுத்துகிறார்கள். சுரவாகடம் போன்ற நூல்களில் டெங்கு சுரத்தை ஒத்த சுரங்களின் விவரணைகள் உள்ளன. நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டது

இப்போதுபோல அப்போதும் அல்லோபதி மருத்துவர்களிடையே இதற்கு எதிர்ப்பு இருந்தது. அரசு ஒரு வகையில் எதைத் தின்றால் பித்தசுரம் தெளியும் என்றுதான் நிலவேம்புக்குப் போனது என்று சொல்ல வேண்டும். நிலவேம்பு குடிநீர் அரசாங்க மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்டதுடன் அதைச் செய்திகள் மூலம் பிரபலப்படுத்துவதும் நடந்தது. அதன் மூலமாகவும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் டெங்கு கட்டுப்பட்டது என்பதுபோலதான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாகச் சென்னையில் உள்ள King Institute of Preventive Medicine & Research நிலவேம்பு மற்றும் பப்பாளி இலைச்சாறுகள் டெங்கு காய்ச்சலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றனவா என்று சுமார் 500 நோயாளிகளைக் கொண்டு பூர்வாங்க ஆய்வு ஒன்றை நடத்தியதாகச் செய்தி வந்தது. பூர்வாங்க ஆய்வுகளில் இரண்டுக்கும் டெங்கு தடுப்பிலும் சிகிச்சையிலும் குறிப்பிடத்தக்க அளவு ஆற்றல் இருப்பதாகத்தான் அறிக்கை வந்தது. இந்த அறிக்கை international journal of Pharmaceutical Sciences and Research இதழில் (ஆகஸ்ட் 2014) ஆய்வுக் கட்டுரையாக வந்தது. இந்தக் கட்டுரையை எழுதியவர்களில் கிங் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் வைராலஜி பிரிவின் விஞ்ஞானியும் உண்டு. இந்தப் பூர்வாங்க ஆராய்ச்சி தொடரப்பட்டதா அதற்கான நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. நிலவேம்பின் பயன் குறித்து சந்தேகம் எழுப்புகிறவர்கள் எழுப்ப வேண்டிய சரியான கேள்வி இதுதான் என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாக, நிலவேம்பு குடிநீர் என்று சொல்லப்பட்டாலும் அது நிலவேம்பு மூலிகையுடன் மொத்தம் ஒன்பது சரக்குகள் சேர்ந்த ஒரு கூட்டு மருந்தாகும். கடைகளில் விற்கப்படுகிறவற்றில் இவை யாவும், சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தக் கூடிய கட்டமைப்பு நம்மிடம் இல்லை. டெங்கு காய்ச்சல் அதிகரிப்புடன் நிலவேம்புக்கான தேவையும் விலையும்கூட பெருமளவு அதிகரித்திருக்கிறது. நிலவேம்பு ஒரு காட்டு மூலிகையாகும். இங்கேயே கொஞ்சம் கிடைத்தாலும் பெருமளவு மத்தியப்பிரதேசத்தியிலிருந்து வருகிறது. மற்ற சரக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்திலிருந்து வருகின்றன. ஆகவே, கடைகளில் கிடைப்பது சரியான வீரியத்துடன் இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரியது.

தவிர கிங் நிறுவனம் கொடுத்திருக்கிற ஆய்வறிக்கையில் நிலவேம்பு குறைந்தது ஐந்து நாள்களுக்காகவாவது குறிப்பிட்ட அளவில் எடுத்தால்தான் பலன் தருகிறது என்று சொல்கிறது. இதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

டெங்கு போன வருடம் கடுமையாக இருந்த வேலூர், ராஜபாளையம், கடையநல்லூர் போன்ற இடங்களில் இந்த வருடம் இல்லை. புதிய இடங்களில்தான் தலைகாட்டியிருக்கிறது. போன வருடம் அந்த இடங்களில் கடும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளும் நிலவேம்புக் குடிநீர் விநியோகமும் நடந்தன.

டெங்குவின் வைரஸ்களில் ஐந்து வகை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருமுறை ஒரு வைரஸ் தாக்குதல் அடைந்தவர் அதற்கான எதிர்ப்புத்தன்மையை உடலில் பெற்றுவிடுவார். ஆனால், மற்ற வகைகளைக் குறித்து அப்படிச் சொல்ல முடியாது. இப்போது, புதிதாக முளைத்திருக்கும் வைரஸ் புதிய வகையைச் சார்ந்ததா என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

டெங்கு அரசியல்

டெங்கு இப்போது அரசியலாகிவிட்டது. இங்கு மட்டுமில்லாமல் கேரளத்திலும். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளத்துக்கு வந்து அங்கு நடந்த 300 டெங்கு மரணங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். பதிலுக்கு அவருக்கு அவர் மாநில கோரக்பூர் சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கும் அதே கதைதான். இது தவிர அல்லோபதி சித்த மருத்துவர்களிடையே நிலவும் அரசியலும் ஒருபக்கம் வெடிக்கிறது. அல்லோபதி மருத்துவர்களும் இன்னும் சிலரும் சித்த மருந்துகளின் ஆராய்ச்சித் தரவுகள் இன்மையைச் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்கள் பதிலுக்கு இவ்வளவு நாள் இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருக்கும் நவீன மருத்துவ ஆதரவாளர்கள் இந்தியா சார்பாக ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா என்று கேட்கிறார்கள்.

உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியாகும். நவீன மருத்துவ ஆராய்ச்சியில் உலகில் நமது பங்கு என்ன? சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் சரியான ஆய்வுகள் இல்லை என்று குற்றம் சாட்டும் நவீன மருத்துவர்களால் அவர்களது துறையில் இந்த 70 வருடங்களில் ஆய்வு செய்து உலக அளவில் பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய கண்டுபிடிப்பைக்கூட ஏன் நிகழ்த்த முடியவில்லை? நிலவேம்பு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கு உதவாது போன்ற தீர்ப்புகளை எழுதுவதற்கும் நாம் சில ஆய்வுகளைச் செய்தே நிறுவ வேண்டி இருக்கும் இல்லையா?

இதன் மறுபுறமாக காய்ச்சல் என்பது நோயே இல்லை. அது வேறு ஒன்றின் அறிகுறி (சூசன் சாண்டாக்கின் புத்தகத்தை நினைவுபடுத்திக்கொள்ளவும்). உபவாசம் இருந்தால் சரியாகிவிடும் என்பது போன்ற அறிவுரைகளும் பெருகிவிட்டன. சிலர் நிலவேம்பு என்று நினைத்துக்கொண்டாலே போதும் டெங்கு தெருமுனையிலேயே நின்றுவிடும் என்கிறார்கள். நாம் சற்று சமன்வயப்படுத்தி யோசிப்பது நல்லது.

நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆகவே இந்த நேரத்தில் சரியான தரவுகள் இருபுறமும் கிடைக்கும்வரை அவரவர் காய்தலையும் உவத்தலையும் ஒதுக்கிவைத்துவிட்டு தடுப்பு நடவடிக்கைகள், நவீன மருத்துவம், சித்த மருத்துவம், கடடமைப்பு வசதிகள் மேம்படுத்தல் என்ற பல்முனை அணுகுமுறையை இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாகக் காட்டுவதே சரியாக இருக்கும்.

(கட்டுரையாளர் போகன் சங்கர்... கவிஞர், எழுத்தாளர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon