மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

குட்கா: விற்பனைக்குத் தடை, உற்பத்திக்கு?

குட்கா: விற்பனைக்குத் தடை, உற்பத்திக்கு?

குட்கா பிரச்னை தமிழகச் சட்டமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் மீதும் மற்ற அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரையும், அமைச்சர் பெயரையும் நீக்கியது ஏன் என்று சட்டபோராட்டம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். குட்கா பிரச்னை உச்சகட்டமடைந்த நிலையிலும், தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆதரவோடு குட்கா போதை பொருள் வியாபாரம் தாராளமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் ரஹீம், “தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் புகையிலைக் கலந்த போதை பொருளான குட்கா போன்ற பொருள்கள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

தமிழகத்தில் குட்காவுக்குத் தடைவிதித்ததால், அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கைநிறையை லஞ்சம் கொடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். கையூட்டு பெற்ற டைரி விவகாரம் அம்பலமானதால் தற்போது மக்கள் காறித் துப்புகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போட்டதால் குட்கா விற்பனை செய்யாமல் நிறுத்தி விட்டார்களா என்ன? அல்லது அதிகாரிகள்தான் லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்களா என்ன? இன்னமும் ஒரு மண்டல ஐ.ஜி குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் உள்ளார்.

எரிவதை நிறுத்தினால் தானே கொதி நிற்கும். இந்திய அரசுதான் குட்கா உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் உற்பத்தி செய்து இந்தியா மட்டும் அல்லாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபி நாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறார்கள். குட்கா என்ற போதைப் பொருள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்கிறார்களே தவிர, உலகில் மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யவில்லை. மத்திய அரசை குட்கா உற்பத்தியை முடக்கச் சொல்லுங்கள் மத்திய அரசால் முடியாது. காரணம், அதில்தான் பொருளாதார வளர்ச்சியிருப்பதாகக் கருதுகிறது.

சிகரெட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுப்பர். அந்த சிகரெட்டில், புகைப் பழக்கம் உடலுக்கு கேடு என்றும் எலும்பு உருகியதுபோல் படம் போட்டும் விற்பனை செய்வர். புகைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அரசு டாக்டர் புகை பிடிக்கக்கூடாது என்றும் மதுபானங்கள் அருந்தக்கூடாது என்றும் சொல்வார்கள். மது பாட்டில்களில் குடி குடியைக் கெடுக்கும் என்று ஸ்டிக்கரும் ஒட்டிவிடுவார்கள். ஆனால், அரசாங்கமே மது உற்பத்தி செய்வதற்கு அனுமதியும் கொடுக்கும்.

மதுபானத் தொழிற்சாலையை அமைச்சர்களே நடத்துவார்கள். மது பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு அந்த வரி, இந்த வரி என்று அரசு பெற்றுக் கடைகளுக்கு அனுமதியும் வழங்கி, அரசே விற்பனையும் செய்து வருவது எவ்வளவு கேவலம்.

விஷம் என்று தெரிந்தும் உற்பத்தி செய்வதற்கு அரசே அனுமதி கொடுத்து, மக்களிடம் விற்பனையும் செய்யச் சொல்லி கடைகளை விரித்துவிட்ட பிறகு வாங்குவது குற்றம், விற்பது குற்றம் என்று தடை விதித்து அதிகாரிகள் ஆதரவோடு விற்பனை செய்வது யாரை ஏமாற்றுவது? மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது அரசியல்வாதிகள் நாடக மேடை” என்று ஆவேசமாகப் பேசினார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon