மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

நிகழ்களம்: மனதோடு பேசும் மண் குதிரைகள்!

நிகழ்களம்: மனதோடு பேசும் மண் குதிரைகள்!

வேட்டை பெருமாள்

வறுத்தெடுக்கும் வெயிலுக்குப் பயந்து அதிகாலையிலேயே பயணத்தைத் தொடங்கிவிட்டேன். நான் செல்லவிருக்கும் ஊரின் பெயர்கூட எனக்குத் தெரியாது. புதுக்கோட்டைக்கு அருகே மண் குதிரைகளால் புகழ்பெற்ற ஊர் என்பது மட்டுமே தெரியும். ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் புகழ்பெற்றவர்கள் அந்த ஊரில் உள்ள குதிரைகள் பற்றி அடிக்கடி சிலாகித்துப் பேசுவதையும் எழுதுவதையும் கவனித்திருக்கிறேன். குறிப்பாக ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் என்னிடம் அந்த ஊரைப் பற்றிக் கூறினார். அவர் அந்த ஊரில் உள்ள குதிரைகள் பற்றி பேசியது அப்படியே இன்றும் மனதில் நிற்கிறது.

“கண்மாய் முழுக்க குதிரைங்கதான்... கண்ணுக்கு எட்டுன தூரம் வரை ஒரே குதிரைதான். ஒவ்வொரு குதிரைக்கும் உயிர் இருக்கு. அது நம்ம கிட்ட பேசுற மாதிரியே இருக்கும். ஒருமுறை போய்ட்டு வா. அந்த எக்ஸ்பீரியன்ஸே தனி”

மருது சார் இப்படி என்னிடம் கூறி எப்படியும் பத்து வருடங்களாவது இருக்கும். ஆனால், அதற்கான தருணம் வாய்க்கவில்லை. இதோ புறப்பட்டுவிட்டேன். இதில் விஷேசம் என்னவென்றால் ஊரின் பெயரை மறந்துவிட்டேன். புதுக்கோட்டைக்கு அருகில் என்பது மட்டும் நினைவில் நின்றது. ஆகவே புறப்படும் முன் மருது சாருக்கே போன் பண்ணி, “புதுக்கோட்டை மாவட்டம். ஆயிரக்கணக்கில் குதிரைங்க...” என்று துண்டு துண்டாகப் பேசினேன். அவர் சிரித்துக்கொண்டே, “அதுவா?” என்று சற்று நேரம் யோசித்தார். திடீரென்று நினைவுவந்தவராக, “ஆங்… நமணசமுத்திரம்... அங்க போறியா? போயிட்டு வா... ரொம்ப நல்லாயிருக்கும்” என்று உற்சாகப்படுத்தினார்.

நமணசமுத்திரம் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாமல் புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே விசாரித்தபோதுதான் புதுக்கோட்டை டு ராமேஸ்வரம் சாலையில் பன்னிரண்டாவது கிலோமீட்டரில் நமணசமுத்திரம் இருப்பது உறுதியானது.

காலையில் வெயில் பட்டையைக் கிளப்பியது. தாகம் வாட்டியெடுத்தது. சாலையோரம் விற்ற ரம்டான் பழங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

பீதியூட்டும் பாதை

புதுக்கோட்டையைக் கடந்து நமணசமுத்திரம் வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால், குதிரைகள் இருக்கும் இடம்தான் தெரியவில்லை. சாலையோரத்தில் புளியமரத்தின் அடியில் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர் (கரை வேட்டிகளை வைத்துச் சொல்கிறேன்). அவர்களிடம் குதிரை என்று நான் சொல்லி முடிப்பதற்குள் வழிகாட்டினார்கள். “குதிரை பாக்க வந்திங்களா..? வெளிநாட்டுக்காரங்க தினமும் வந்துட்டு இருக்காங்க. போய் பாருங்க. அசந்து போயிடுவீங்க” என்று சொன்னார் அதில் ஒருவர்.

இன்னொருவரோ, “பாதை கொஞ்சம் குழப்பமா இருக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது. கொஞ்சம் நிதானமா போங்க... இல்லாட்டி திரும்பி இதே இடத்துக்கு வந்துடுவீங்க” என்று பீதியைக் கிளப்பினார். துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கலாமோ என்று அப்போதுதான் தோன்றியது.

ஒருவழியாக மனதைத் திடப்படுத்திக்கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கூறிய பாதை நெருக்கமான குடியிருப்புப் பகுதிக்குள் சென்றது. ஏதோ பாதை மாறிவிட்டோமோ என்று குழப்பம் வந்தது. அப்போது தலையில் சீமைக்கருவேல விறகைச் சுமந்து வந்த பெண்மணியிடம் விசாரித்தேன். “இடது பக்கமாகவே போங்க. மாறினா திருமயம் ரோட்டுல போய் ஏறிடுவீங்க. பாத்து போங்க” என்று சொன்னார். சற்று தூரம் பயணித்த பிறகு புதர்க்காடு தொடங்கியது. சாலைகள் இரண்டு பக்கமும் பிரிந்துகொண்டே போயின. அந்தப் பெண்மணியின் சொல்லை நினைவில் நிறுத்தி மாறாமல் இடது பக்கச் சாலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறினேன்.

அமானுஷ்ய அனுபவம்

சட்டென்று சூழ்நிலை மாறியது. ஆள் அரவம் அடியோடு அற்றுப்போனது. பலவித குருவிகள் விதம் விதமாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. சூழல் ஏகாந்தமாக இருந்தது. இனம்புரியாத மிரட்சியையும் உண்டாக்கியது. ஒரு திருப்பத்துக்குப் பிறகு எதிர்ப்பட்டது ஓர் ஆலயத்தின் அலங்கார வளைவு. அந்த வளைவின் உள்ளே ஒரு தார்ச் சாலை நீண்டது. அந்த வளைவை ஒட்டி இரு மருங்கிலும் குதிரைகள் வரிசை கட்டி நின்றன. ஒருவித தயக்கத்தோடு இருபுறமும் குதிரைகள் புடைசூழ நான் என் வாகனத்தில் முன்நோக்கிப் புறப்பட்டேன்.

குதிரைகள், குதிரைகள், குதிரைகள்... எங்கு பார்த்தாலும் குதிரைகள்... இப்படியொரு பிரமாண்டமான காட்சியை நீங்கள் ஷங்கர் படத்தில்கூடப் பார்க்க முடியாது.

வாகனத்தில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் சென்ற பிறகும் இலக்கை அடைந்தாகத் தெரியவில்லை. மேலும் முன்நோக்கி வாகனத்தில் செல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. யாருமற்ற காடு. சிறு அணிலின் அசைவின் ஓசைகூட பூதாகரமாகக் கேட்கிறது. வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தினேன். சாலை ஓரங்களில் நின்ற குதிரைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு குதிரையும் என்னையே முறைத்துப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை. சில குதிரைகள் சிரிக்கிறதோ என்று தோன்றியது. வேறொரு குதிரை ஏதோ சொல்ல முற்படுவதுபோல் ஓர் எண்ணம். எங்கே அந்தக் குதிரைகள் வாய் திறந்து பேசிவிடுமோ என்றொரு விசித்திர எண்ணம்கூட எனக்குள் எழுந்தது. விவரித்துச் சொல்ல முடியாத அபாரமான அமானுஷ்ய அனுபவம் அது.

நான் மிகையாகக் கூறுவதாக உங்களுக்குத் தோன்றலாம். அப்படியொரு சூழலை நீங்கள் எதிர்கொள்ளும்போதுதான் நான் கூற வருவது உங்களுக்குப் புரியவரும். அங்கே ஆயிரக்கணக்கான குதிரைகள் வரிசை கட்டி நின்றன. அத்தனையும் மண் குதிரைகள்தான். ஆனால், இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால் ஒரு குதிரை காட்டும் முகபாவம் இன்னொரு குதிரையிடம் இல்லை. ஒவ்வொரு குதிரையையும் என்னால் தனித்தனியாக அடையாளம் காண முடிந்தது. நீடித்த நிசப்தம் என்னை சற்றே அச்சத்தில் ஆழ்த்தியது என்பதை மறுக்க முடியாது. யாரையாவது காண நேரிட்டால் நன்றாக இருக்குமே என்றொரு தவிப்பு. அதே நேரம் இந்தப் பேரண்டத்தின் நிசப்தத்தைத் தனியொருவனாக உணரும் அற்புதமான வாய்ப்பு அது என்பதையும் உணர்ந்து அதில் லயித்தேன்.

சற்றே முன்நோக்கி வாகனத்தைச் செலுத்தினேன். ஓரிடத்தில் தார்ச் சாலை முடிவடைந்தது. அதற்கு மேல் மண் சாலை முன்நோக்கி நீண்டது. அந்தப் பாதை மிக மிகத் துப்புரவாக, பிரத்தியேகமாக இருந்தது. அதற்கு மேல் செருப்பை அணிந்து செல்லலாமா, வாகனத்தில் செல்லலாமா எனப் பல கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், குதிரைகளைத் தவிரக் கேள்வி கேட்க அங்கே யாருமில்லை (குதிரையிடம் கேட்டுப் பார்த்தால் என்ன என்றொரு கிறுக்குத்தனமான எண்ணம் வேறு எனக்குள் உதித்தது).

வாகனத்தைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செருப்பையும் கழற்றிவிட்டு வெற்றுக் காலோடு நடக்கத் தொடங்கினேன். என்னோடு சேர்ந்தே நடந்தன குதிரைகள். மண் சாலையில் கிடந்த பொடி மண் சூடு காலைப் பதம் பார்த்துவிட்டது என்ற போதும் இரு பக்கமும் நின்ற குதிரைகளை ரசித்துக்கொண்டே முன்னே நடந்தேன். திடீரென்று ஏதோ எண்ணம் வர நான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தேன். அடடா… எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும் அந்தக் காட்சியை அவற்றுள் அடக்கிவிட முடியாது. எத்தனை ஆயிரம் வார்த்தைகளைக் கோத்தாலும் அதை விளக்கிச் சொல்லிவிட முடியாது. அந்த உலகத்தில் என்னையும் மண் குதிரைகளையும் தவிர வேறு யாருமே இல்லை. குதிரை உலகின் ஒரே மனிதப் பிரதிநிதி நான்.

மண் சாலையில் திடீரென்று ஒரு திருப்பம்.. அந்தத் திருப்பத்தைக் கடக்கும்போது திடீரென்று ஒரு யானை எதிர்ப்பட்டது (யானை சிலைதான்). ஒரு கணம் மனதிற்குள் பக்கென்ற அதிர்ச்சி. எதிர்பாராத திருப்பம் என்று சொல்வார்களே, அந்தத் திருப்பம் இதுதான். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பிரமாண்டமான புளிய மரம் எதிரே நின்றது. அந்த மரத்தை நெருங்க நெருங்க அந்த மரத்தடிதான் மூலவர் சந்நிதி என்பதும் எனக்குப் புலப்பட்டது. அந்த மரத்தின் நிழல் அந்த வனப்பகுதியெங்கும் வியாபித்திருந்தது. புளிய மரத்தடியில் முறுக்கிய மீசையோடு கம்பீரமாக அமர்ந்திருந்தார் அங்குள்ள அத்தனை குதிரைகளுக்கும் சொந்தக்காரரான அய்யனார். அந்த அய்யனாரைப் பற்றி மெய்சிலிரிக்க வைக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகள்...

(இறுதி பாகம் நாளை...)

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon