மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு!

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு!

தமிழக முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்துக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி்க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமுதாயம் மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது ஆண்டுதோறும், முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருது மூவருக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்கச் செயல் அவர்கள் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில், இப்பதக்கத்தை பெற தகுதியுடையவர்களாவர். இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது அவர்கள் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரியும்போது, அவர் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி வழங்கப்படுகிறது.

அதேபோல், வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும் குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது. இந்த விருதில் ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், தகுதியுரை அடங்கும். வீர தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கம் பெறலாம். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கம் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

வரும் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள கபீர் புரஸ்கார் விருது மற்றும் அண்ணா பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் மூலம், அரசு முதன்மை செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்துக்குள் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon