மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

தற்கொலை: பெண்களைவிட ஆண்களே அதிகம்!

தற்கொலை: பெண்களைவிட ஆண்களே அதிகம்!

ஐதராபாத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்வதாகக் குற்றவியல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 265 பேர் ஆண்கள். அந்த 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல் 137 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். பெண்கள் தற்கொலைக்குப் பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாகக் கூறப்படுகிறது.

வேலைப்பளு, கடன் பிரச்னை ஆகிய காரணங்களால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மனநல மருத்துவர் சுனில்குமார் கூறும்போது, “உலகளவிலும் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெண்களைவிட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்றுவிடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும், பெண்கள் தற்கொலை முயற்சியில் மட்டும் தான் ஈடுபடுவார்கள். ஆனால், ஆண்கள் அதை செய்து முடிப்பார்கள். உளவியல் ரீதியான பிரச்னைகள், சமூக பொருளாதார மாற்றங்கள் ஆகிய காரணங்களால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்” என்று கூறினார்.

மேலும், “30 வயதில் இருந்து 44 வயதுக்குள் உள்ளவர்களே பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களில் திருமணம் ஆன ஆண்களே அதிகம். இந்தியாவில் சின்னஞ்சிறு பிரச்னைகளுக்கெல்லாம் யோசிக்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon