மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

உலகக்கோப்பை கனவு: இந்திய அணியின் கடைசி வாய்ப்பு!

உலகக்கோப்பை கனவு: இந்திய அணியின் கடைசி வாய்ப்பு!

17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதன்முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே அமெரிக்காவுக்கு எதிராகப் படுதோல்வி அடைந்து, இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

இரண்டாவது ஆட்டத்திலும் கொலம்பியாவிடம் போராடித் தோற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்தில் கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கோலை அடிக்கப் போராடிய இந்திய அணிக்கு 82ஆவது நிமிடத்தில் 'கார்னர் கிக்' கிடைத்தது. இந்திய வீரர் சஞ்சீவ் அடித்த பந்தை, அந்தரத்தில் உயர்ந்து வாங்கிய ஜீக்சன். பின் தனது தலையால் இடதுபுறமாக முட்ட, பந்து வலைக்குள் சென்று கோலாக மாறியது. இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார் மணிப்பூரைச் சேர்ந்த ஜீக்சன்.

மொத்தமுள்ள ஆறு குரூப்புகளில் இருந்து முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் (ரவுண்ட் ஆப் 16 சுற்று) தகுதி பெறும். 16 அணிகளில் 12 அணிகள் தேர்வு செய்யப்படும். மீதமுள்ள 4 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெரும்.

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி புள்ளிகள் எதுவுமின்றி கடைசி இடத்தில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் இந்திய அணி கானாவை 3-0 எனத் தோற்கடிக்க வேண்டும். மேலும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா, அதிக கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இது நடந்தால் கோல்கள் அடிப்படையில் இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்தாலும் நாக் அவுட் சுற்றுகளில் விளையாடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெரும். அதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு நாளை நடைபெறவுள்ள கானா அணிக்கு எதிரான ஆட்டத்தைப் பொறுத்தே அமையும்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon