மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சீன நிறுவனத்திடம் நிதி திரட்டிய ஓலா!

சீன நிறுவனத்திடம் நிதி திரட்டிய ஓலா!

இந்தியாவின் ஓலா டாக்ஸி நிறுவனம் தனது சேவை விரிவாக்கத்துக்காக சீனாவைச் சேர்ந்த டென்சண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் சுமார் 1.1 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

இந்தியாவின் முன்னணி டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஓலா, குறைந்த கட்டணத்தில் தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஓலா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் வழங்கிவரும் கடுமையான போட்டியைச் சமாளிக்கவே ஓலா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஓலாவுக்குக் கடுமையான வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஓலா நிறுவனம் தனது சேவை விரிவாக்கப் பணிக்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் டென்சண்ட் ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்திடம் 1.1. பில்லியன் டாலர் (ரூ.7,180 கோடி) நிதி திரட்டியுள்ள ஓலா, இன்னும் 1 பில்லியன் டாலர் நிதி திரட்ட முதலீட்டாளர்களிடையே ஆலோசித்து வருகிறது. இந்த நிதி வாயிலாக டாக்ஸிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் ஓலா திட்டமிட்டுள்ளது. மே மாதத்தில் ஓலா நிறுவனத்தின் இழப்பு மூன்று மடங்கு உயர்ந்து ரூ.2,313.7 கோடியாக இருந்தது. கட்டணக் குறைப்பில் ஈடுபட்டதாலேயே வருவாய் இழப்பைச் சந்தித்ததாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், சந்தையில் தனது இடத்தை உபேரிடம் இழந்துவிடக் கூடாது என்பதற்காக அதிக நிதி திரட்டி தனது சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஓலா மிகத் தீவிரமாக உள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது