மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

நம்மாழ்வார் சொன்ன நற்செய்தி!

 நம்மாழ்வார் சொன்ன நற்செய்தி!

ராமானுஜர் என்று ஒருவர் தோன்றுவார் என்பதை நம்மாழ்வார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டார். அந்த விசேஷ செய்தி பல தலைமுறைகளுக்கு முன்பே வெளியிடப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.

இதுதான் குருபரம்பரை சொல்லும் செய்தி.

ஆளவந்தார் வைபத்தில் வார்த்தா மாலையில் இதுபற்றி சொல்லப்பட்டிருப்பதாக நேற்று பார்த்தோம்.

அது என்ன?

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.

வைணவம் எதையுமே முன், பின் காரண காரியங்கள் இல்லாமல் மொழிவதில்லை. இன்று வைணவர் ஒருவர் எங்கேயோ பின்பற்றும் ஒவ்வொரு செய்கைக்கும் காரணியிருக்கும்.

அப்படித்தான் நாதமுனிகள் ஆழ்வார்களின் அருளிச்செயலைத் தேடி தாமிரபரணிக் கரையிலுள்ள திருக்குறுகைக்கு வந்து அங்கே நம்மாழ்வாரை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போதுதான் அவருக்கு திருவாய்மொழியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்கள் கிடைத்ததாக வைணவம் சொல்கிறது. நாதமுனிகளின் உடல் மற்றும் மனத் தேடுதலால் திருவாய்மொழி அவருக்கு வாய்த்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அந்த சூழலிலேயே அதாவது ஆளவந்தாரின் தாத்தா நாதமுனிகள் காலத்திலேயே இந்த பூமிக்கு ராமானுஜர் வருவார் என்று சொல்லப்பட்டதாக பெருமை கொள்கிறது குருபரம்பரை.

எப்படி சொல்லப்பட்டது?

அதற்கான பாசுரம்தான் மேலே இருக்கும் பொலிக பொலிக!

அதாவது ராமானுஜர் என்ற ஆச்சாரியர் வருவார் என்பதை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மாழ்வார் தனது பாசுரத்தில் சொல்லியிருக்கிறார்.

நம்மாழ்வார் தனது திருவாய்மொழியின் ஒரு பகுதியில் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அந்த பகுதியில்தான் பொலிக பொலிக என்னும் பாசுரமும் வருகிறது.

’கடல் போன்ற நிறத்தையுடைய நாராயணனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!’ என்கிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாடலை நாதமுனிகளுக்கு உரைத்த நம்மாழ்வார், ‘’இவ்வாறு கலியின் பாவத்தைப் போக்க ஒரு பவிஷ்யாதாச்சார்யார் ( வருங்கால ஆசாரியார் ) அவதரிப்பார். அவருக்கு உன் பேரன் மூலம் சகல வித்தைகளையும் கற்றுக் கொடு’ என்று கூறியிருப்பதாக குருபரம்பரை சொல்கிறது.

இந்த சம்பவம் நாயனாராச்சான் அருளிய சரமோபாய நிர்ணயம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

ஆக ராமானுஜர் மூலம் திருவாய்மொழி மேம்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த திருவாய்மொழியை இயற்றிய நம்மாழ்வாரே முடி வு செய்தது. நம்மாழ்வார் இதை நாதமுனிகளிடம் சொல்கிறார்., நாதமுனிகள் தன் காலத்தில் ராமானுஜரைப் பார்க்க வாய்ப்பில்லை. அதனால் நாதமுனிகள் தன் சிஷ்யர்களிடமும் தன் பிள்ளை ஈஸ்வர முனியிடமும் சொல்கிறார். அதன் வழியாக நாதமுனிகளின் பேரன் ஆளவந்தாரிடம் சொல்லப்பட வேண்டும். ஆனால் ஆளவந்தார் தம் ஆரம்பகட்ட வாழ்வை அரச மாளிகையில் சுகானுபாவராக கழிக்கிறார். அதனால், அவருக்கும் முதலில் இந்தத் தகவல் சொல்லப்படவில்லை.

ஆளவந்தார் யமுனாச்சாரியராக இருந்த காலகட்டத்தில் இதுபற்றி அறிந்திருக்கவில்லை. அதன்பின் அவர் அரசையில் இருந்தபோது நாதமுனிகளின் சீடர்கள் அவரை சந்திக்க மிகவும் சிரமப்பட்டு தூதுவளை துவையல் மூலமாக ஆளவந்தாரைப் பிடித்து அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகுதான் ஆளவந்தார் வைணவ சம்பிரதாயத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு தன் தாத்தா நாதமுனிகள் காட்டிய வழியில் ராமானுஜரைத் தேட ஆரம்பித்தார். பின்னர் காஞ்சிபுரத்தில் கண்டுபிடித்தார்.

இங்கேதான் காலம் ஆடிய ஆட்ட த்தை கவனிக்க வேண்டும். ஆளவந்தார் தன் ஆரம்பக் காலம் தொட்டே வைணவத்தில் தீவிர ஈடுபாடு காட்டியிருப்பாரே என்றால், அவரால் ராமானுஜரை இன்னமும் முன்னரே கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவர் மத்திமத்தில்தான் தீவிர சம்பிரதாயத்துக்குள் இறங்கினார்.

அதன் பிறகே ராமானுஜரை தேட ஆரம்பித்தார். காஞ்சியில் ராமானுஜரை கண்டுபிடித்தபோது அவருக்கு வயதாகிவிட்டது. ராமானுஜர் தலையெடுத்தபோது அவருக்கு முதுமையாகிவிட்டது.

நம்மாழ்வார் நாத முனிகளிடம் சொல்லி, நாதமுனிகள் ஈஸ்வர முனிகளிடம் சொல்லி, ஈஸ்வர முனிகள் விரைவிலேயே காலமாகிவிட்டதால் நாதமுனிகளின் சீடர்கள் ஆளவந்தாரிடம் சொல்லி… இவ்வாறு அந்த வைணவ வரலாற்றுச் செய்தி ராமானுஜரை வந்தடையும்போது ஆளவந்தார் தன் வாழ்வின் அந்திமக் கட்டத்துக்குப் போய்விட்டார்.

காஞ்சிபுரத்தில் இருந்த ராமானுஜரை அவசரமாய் திருவரங்கம் அழைத்தார் ஆளவந்தார். அப்போதே தன் சீடர்களிடம் சொல்லிவிட்டார். ராமானுஜர் வருவார், அவர்தான் வைணவத்தின் அடுத்த ஆச்சாரியர் என்று தனது தலைமுறைச் செய்தியை!

ராமானுஜர் அவசர அவசரமாக ஓடோடி வந்தார் திருவரங்கத்துக்கு… ஆளவந்தாரின் மடத்தில் அவர் இல்லை. காவிரிக் கரைக்கு ஓடினார். அங்கே….

குருபரம்பரை வைபவத்தை பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெளியீடுகள் மூலம் அழகாக பரப்பி வருகிறார் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன். பாசுரங்களை பரப்புவதில் ஜெகத்ரட்சகனுக்கு இருக்கும் ஈடுபாட்டின் மூலம் வைணவம் தழைத்து ஓங்குகிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon