மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி!

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி!

மதுரையில் ஒன்றரை மணி நேரம் பெய்த கன மழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 04) மாலை 6.45 மணி அளவில் மதுரையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து கன மழை பெய்யத் தொடங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. பெரியார் பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த கன மழையால் சித்திரை வீதிகளில் தேங்கிய மழைநீர் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் சுவாமி சன்னதி வழியாகக் கோயிலின் தங்கக் கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்தில் புகுந்தது. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். சிறிது நேரத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை இந்தியாவில் சுத்தமான கோயிலாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon