மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

போர் விமானங்களில் பெண்கள் நியமனம்!

போர் விமானங்களில் பெண்கள் நியமனம்!

இந்திய ராணுவத்தில் 1991ஆம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பெண்கள் விமானிகளாக உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு, போர் விமானங்களிலும் ஆர்வமுள்ள இளம்பெண்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் என இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா தெரிவித்திருந்தார்.

போர் விமானங்களில் ஆண்களைப் போல் பெண்களும் பணிபுரிய ராணுவ அமைச்சகம் 2015, அக்டோபர் 24ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த பெண்களில் 6 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மத்தியப் பிரதேசத்தின் அவானி சதுர்வேதி, ராஜஸ்தானைச் சேர்ந்த மோகனா சிங், பீகார் மாநிலத்தின் பாவனா காந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. தெலங்கானா மாநிலம் ஹக்கிம்பேட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் போர் விமானங்களை இயக்குவதற்கான 3ஆம் கட்டப் பயிற்சியை மூவரும் வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். தற்போது, மூவரும் மேற்கு வங்கம் கலைகுண்டாவில் உள்ள ஐ.ஏ.எஃப் அமைப்பில் பிரிட்டிஷ் ஹாக் முன்னணி ஜெட் பயிற்றுவிப்பாளர்களிடம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களின் இறுதிக் கட்டப் பயிற்சி இந்த மாதம் முடிவடைகிறது.

இந்திய விமானப் படையின் தளபதி பி.எஸ்.தனோயா டெல்லியில் நேற்று முன் தினம் (அக்டோபர் 3), “இவர்கள் மூவரும் வரும் டிசம்பர் மாதம் போர் விமானத்தின் விமானிகளாக முறைப்படி நியமனம் செய்யப்படவுள்ளனர். போர் விமானங்களை இயக்குவதற்காகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பெண் விமானிகள், தங்களுடைய பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் 4 ஆண்டுகள் வரை கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுகோய் 30 மற்றும் தேஜாஸ் ரக போர் விமானங்களை விரைவில் இயக்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போர் விமானிகளாகப் பெண்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon