மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

இரட்டை இலை: தினகரன் மனு தள்ளுபடி!

இரட்டை இலை: தினகரன் மனு தள்ளுபடி!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அணியினர்,"அணிகள் இணைந்து நடத்திய அதிமுக பொதுக்குழுவின் தீர்மான நகலை அளித்து, தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், இரட்டை இலை வழக்கை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து இரட்டை இலை தொடர்பாக அக்டோபர் 6ஆம் தேதி (நாளை) இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து, அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யக் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியைக் கடைசி நாளாக அறிவித்தது.

பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய தினகரன் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட 15 நாட்கள் அவகாசமும் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 29 ஆம் தேதியே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இரு அணிகள் சார்பிலும் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தினகரன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு

தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஆவணங்களை சமர்ப்பித்த பின் சின்னம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று ( அக்டோபர் 5) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து வந்த தீர்ப்பில்,"இரட்டை இலை சின்னம் தொடர்பாக மனுதாரர் தரப்பு தேர்தல் ஆணையத்தைத்தான் அணுக வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்" என்று குறிப்பிட்டு தினகரன் தரப்பு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon