மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

இ-காமர்ஸ் துறையில் ரோபோக்கள்!

இ-காமர்ஸ் துறையில் ரோபோக்கள்!

இந்தியாவில் மிகப்பெரிய ரோபோடிக்ஸ் கிடங்கு ஒன்றை கிரே ஆரஞ்சு என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ஆன்லைன் சில்லறை வர்த்தகர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நேரம் மற்றும் செலவைக் குறைக்க உதவுகிறது. இந்த ரோபோக்கள் மனிதர்களை விட 4 மடங்கு வேகமாகப் பொருட்களை விநியோகம் செய்கின்றன. இதனால் இந்திய இ-காமர்ஸ் துறைக்கு இந்த ரோபோக்கள் மிகப்பெரிய பூரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இந்த நிறுவனம் குருகிராமிலிருந்து இயங்குகிறது. இதுகுறித்து கிரே ஆரஞ்சு நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆகாஷ் குப்தா கூறும்போது, "இந்த ரோபோக்கள் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை 20 நிமிடத்தில் கிடங்கிலிருந்து எடுத்து அனுப்பி விடுகிறது. ஏற்கனவே இந்த ரோபோக்கள் மாதத்திற்கு 1.2 கோடி பாக்கெட்டுகளை வரிசைப்படுத்தி வைக்கின்றன. 70 முதல் 80 சதவிகிதப் பணிகளை இந்த ரோபோக்களே செய்துவிடுகின்றன" என்றார்.

இந்தியாவுடைய ஆன்லைன் வர்த்தகம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 64 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று ஆலோசனை நிறுவனம் எதிர்பார்க்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 31.2 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான 71 கிடங்குகளில் கால்மடங்கு கிடங்குகள் கடந்த ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் முக்கியத் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இ-காமர்ஸ் துறையில் ரோபோக்களின் வருகை என்பது இத்துறையைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதனால் பணியிழப்புகளும் ஏற்படும் நிலை உருவாகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon