மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

பரோல் ஆவணங்கள் சென்னையில் ஆய்வு!

பரோல் ஆவணங்கள் சென்னையில் ஆய்வு!

சிறையிலுள்ள சசிகலாவின் பரோல் ஆவணங்களில் சிலவற்றைச் சென்னை காவல் துறையினர் சரிபார்த்துள்ளதாகக் காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

'புதிய பார்வை' ஆசிரியரும், சசிகலாவின் கணவருமாகிய நடராஜன் கடந்த சில மாதங்களாகச் சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்குக் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழந்ததைத் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துவந்தார். மாற்று உறுப்புகள் கிடைத்ததையடுத்து நேற்று காலை நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து நடராஜன் நலமாக இருப்பதாக சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சார்பில் பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி மனுவை நிராகரித்த சிறை நிர்வாகம், போதிய ஆவணங்களுடன் புதிய மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. அதன்படி நடராஜன் உடல்நிலை குறித்த மருத்துவச் சான்றுகளோடு சசிகலா சார்பில் 15 நாட்களுக்கு பரோல் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில் சிலவற்றைச் சென்னை காவல் துறையினர் சரிபார்த்தனர். ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானவைதானா என்பது குறித்துப் பரிசீலித்துவருவதாகவும், அவை சரிபார்க்கப்பட்ட பின்னர் கர்நாடக சிறைத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி உள்ளிட்ட சில தகவல்களை சரிபார்த்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்த கர்நாடக சிறைத் துறையின் வேண்டுகோளையடுத்து இந்த ஆய்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பிய பின் சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து கர்நாடக சிறைத் துறை முடிவெடுக்கும்.

சிறையிலுள்ள சசிகலாவைச் சந்திக்க, தினகரன் இன்று பெங்களூரு சென்றுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon