மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

ரோஹிங்கியா அகதிகளை இந்தியா வெளியேற்ற முடியாது!

ரோஹிங்கியா அகதிகளை இந்தியா வெளியேற்ற முடியாது!

சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதால், ரோஹிங்கியா அகதிகளை இந்தியா நாடு கடத்த முடியாது என்று மூத்த வழக்கறிஞரான ஃபாலி நரிமன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பலர் வங்கதேசத்திலும் இந்தியாவிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கும் முகமது சலிமுல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (அக்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நர்மன், ’ ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்காக வரும் அகதிகளுக்கும் சட்ட விரோதமாகக் குடிபுகுபவர்களுக்கு வித்தியாசம் உள்ளது என்ற 2011ம் ஆண்டின் அறிவிப்பை மேற்கோள் காட்டினார். மேலும், இந்தியா கையெழுத்திட்டுள்ள அகதிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான நியூயார்க் பிரகடனத்தையும் வாசித்தார். ஏதாவது ரோஹிங்கிய அகதிகள் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தால் அவர்களை மட்டும் வெளியேற்றுவதற்குச் சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த முடியாது என்று வாதிட்ட அவர், அவர்களைத் தீவிரவாதிகளாக சித்திரிப்பது அபத்தமானது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அகதிகள் தொடர்பான விவகாரம் முற்றிலும் அரசு சார்ந்தது இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அரசியலமைப்பு சட்டம் 32ன் படி இந்தியர் அல்லாதோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தனது வாதத்தை முன் வைத்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நரிமன், அரசியலைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21வது பிரிவு அனைத்து மக்களுக்குமே உரிமைகளை வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவில், தனிநபர்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதனால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்று வாதித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மனு மீது வரும் 13-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும். அப்போது சட்ட விதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆதலால், இந்த விவகாரம் மனிதாபிமானம் மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது என்று உணர்வுப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதைப் பிரதிவாதிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வழக்கு விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில், தேவைப்படும் ஆவணங்கள், சர்வதேச தீர்மானங்களை தாக்கல் செய்யும்படி, மனுதாரரான ரோஹிங்கயா அகதிகள், மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று உத்தரவிட்டனர்

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon