மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

காதலை அறிமுகப்படுத்திய புவனேஸ்வர் குமார்

காதலை அறிமுகப்படுத்திய புவனேஸ்வர் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிப் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் தனது நீண்ட நாள் தோழியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

புவனேஸ்வர் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மே மாதம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் பாதி புகைப்படம் கிராப் செய்யப்பட்ட நிலையில் மீதி விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். களத்தில் தனது ஸ்விங் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குழப்பம் அளிக்கும் புவனேஸ்வர், அந்தச் செய்தியின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். அந்தக் குழப்பத்திற்கான பதிலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். முழுப் புகைப்படத்தையும் வெளியிட்டு, அதில் இருப்பவர் தனது வாழ்க்கைத் துணை என்பதையும் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த புவனேஸ்வர், அதே நகரைச் சேர்ந்த நுபுநகர் ஆகிய இருவரும் நீண்ட நாள் நண்பர்களாவர். நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியதைத் தொடர்ந்து, விரைவில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். நுபுநகர் தற்போது நொய்டாவில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் வேலைசெய்துவருகிறார். அவரது தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி.

இதுபற்றி புவனேஸ்வரின் தந்தை கிரண் பால் சிங் தெரிவிக்கையில், " இருவரும் நீண்டநாள் காதலித்துள்ளனர். எங்கள் மகனுக்குப் பிடித்தால் நாங்களும் சம்மதம் தெரிவித்துவிட்டோம். தற்போது இந்திய அணிக்குத் தொடர்ந்து போட்டிகள் நடைபெறுவதால் புவனேஸ்வர் பிஸியாக இருக்கிறான். டிசம்பர் மாதம் இலங்கைத் தொடர் முடிந்தவுடன் 10 நாட்கள் விடுமுறை இருக்கிறது. அந்தச் சமயத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தேதி முடிவானவுடன் மீரட் அல்லது டெல்லியில் திருமணம் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் `டெத் ஓவர்' எனச் சொல்லப்படும் கடைசி 10 ஓவர்களின்போது இந்தியாவின் சிறப்பாகப் பந்துவீசும் புவனேஸ்வர் இதுவரை இந்திய அணிக்காக 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon