மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

தெலுங்கைக் கட்டாயமாக்குங்கள்: வெங்கையா யோசனை!

தெலுங்கைக் கட்டாயமாக்குங்கள்: வெங்கையா யோசனை!

ஆந்திராவில் வேலைப் பெறுவதற்கு தெலுங்கு மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் துணை ஜனாதிபதி வெங்கையா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் விஜயவாடாவில் நெடுஞ்சாலை பணிகள் மற்றும் நீர்வழி போக்குவரத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த அக்டோபர் 3ம் தேதி நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வெங்கையா, ‘ ஆந்திராவில் பணிபுரிய தெலுங்கு மொழி அவசியம் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மாணவர்கள் எந்த வழிக் கல்வியை பயின்றாலும், தெலுங்கு மொழியைக் கண்டிப்பாக கற்க வேண்டும் என சட்டம் இயற்றவேண்டும். முதல்வர் சந்திரபாபு, இதனை உடனே செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவ்வாறு செய்வதன் மூலம், ஏராளமானோர் தெலுங்கு மொழியைக் கற்பார்கள். மேலும் லட்சக்கணக்கானோர் தங்கள் தாய்மொழி மீது பற்றாக இருப்பார்கள். இது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

மற்ற மொழிகளை மக்கள் கற்பதற்கு தான் எதிராக இல்லை என விளக்கமளித்த வெங்கையா, மற்ற மொழிகளைக் கற்பதற்கு முன்பு உங்கள் தாய்மொழியை கற்றுக்கொள்ளுங்கள். இந்த முயற்சியின் மூலம் மக்கள் தங்கள் தாய்மொழியில் கைதேர்ந்தவர்களாக இருக்க முடியும் எனத் தாய்மொழியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

’நான் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கிறேன். சந்திரபாபு முதல்வராக இருக்கிறார். ஆனால், நாங்கள் இருவருமே ஆங்கில வழிக் கல்வியை கற்கவில்லை. பிரதமர் மோடியும் ஆங்கில வழிக் கல்வியை கற்கவில்லை. தற்போது,ஒரு வலிமையான தேசத்தின் பிரதமராக அவர் இருக்கிறார்’ எனவும் வெங்கையா தெரிவித்தார்.

மக்கள் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் எனத் தொடர்ந்து வெங்கையா வலியுறுத்தி வருகிறார். கடந்த செப்டம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியர்கள் ஆங்கிலத்தை விடுத்து அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும். இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுபோல், செய்தி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘ இந்திதான் நமது தேசிய மொழி. ஆங்கிலத்துக்குத் தேவை இல்லாமல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon