மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

பருவ மழையை அரசு எதிர்கொள்ளத் தயார்!

பருவ மழையை அரசு எதிர்கொள்ளத் தயார்!

பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மழைக் காலம் தொடங்குவதையொட்டி சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதைத் திறந்து வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின், இன்று (அக்டோபர் 05) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறைச் செயலாளர்களும் இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளனர். கனமழை பெய்யும்போது பாதிக்கப்படும் பகுதிகள் எவை எவை என முன்கூட்டியே கண்டறியப்பட்டு அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கான மீட்புப் பணிக்குத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மழைக் காலங்களில் மக்களைத் தங்க வைக்க 3172 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 121 பல்நோக்குப் பாதுகாப்பு மையங்களும் கட்டப்பட்டுவருகின்றன” என்றார்.

மழை நிவாரண மீட்புப் பணிகளுக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் குடிநீரில் அதிக அளவு மாதிரிகள் எடுத்து, தேவையான குளோரின் கலக்கவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.

“மழைத் தண்ணீரை ஏரி, குளங்களில் எந்த அளவு சேமிக்க முடியுமோ அந்த அளவுக்குச் சேமிக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon