மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

சுந்தர்.சி மீது மோசடி புகார்!

சுந்தர்.சி மீது மோசடி புகார்!

இயக்குநர் சுந்தர்.சி பண மோசடி செய்ததாகவும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறை ஆணையரிடம் நடிகரும், இயக்குநருமான வேல்முருகன் புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகில் பயணிக்கும் வேல்முருகன், இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ள அவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சுந்தர்.சி மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "கடந்த 15 ஆண்டுகளாக சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி என்ற தொடரைத் தயாரித்துவருகிறார். அந்தத் தொடரின் கதையை நான்தான் எழுதினேன். அந்தக் கதைக்காக எனக்கு ரூ.50 லட்சம் தருவதாகக் கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி ரூ.46 லட்சம் பணத்தைத் தர மறுக்கிறார். அந்தப் பணத்தை அவரிடம் கேட்கப்போனால் அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார்கள். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைமிரட்டல் புகார் குறித்து வேல்முருகனிடம் மின்னம்பலம்.காம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசினோம். "நான் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுந்தர்.சி க்கு எதிராகப் பண மோசடி வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கில் சுந்தர். சி நாளை (அக்.06) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒருவார காலமாக என்னைச் சிலர் நேரடியாகவும், தொலைபேசியிலும் இந்த வழக்கு தொடர்பாகக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதற்கு பயந்து எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நேற்று (அக்.04) காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தேன்" என்று கூறினார்.

இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அண்ணாநகர் துணை கமிஷனருக்குச் சென்னை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon