மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு!

விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு!

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை பரப்புகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷணன் ஆகியோரும் அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், காய்ச்சலுக்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இன்று( அக்டோபர்-5) தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,"டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைகளில் சென்று நலம் விசாரித்தேன். டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அதைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டேன்.

தமிழகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளரே அறிக்கை வெளியிட்டு ஓரளவிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுவரை 26 பேர்தான் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர் என்ற ஒரு தவறான தகவலை கூறியுள்ளனர். தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது. இதையெல்லாம் மறைத்து ஒரு தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரப் பணியை ஒழுங்காக செய்திருந்தால் டெங்கு காய்ச்சலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,"டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மறைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1117 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியும்.தமிழக அரசு இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பலியாகி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவி ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த கருவியை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சரியான முறையில் எடுத்து இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி மருத்துவ அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, டெங்குகாய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon