மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

திறக்கப்பட்டது கல்லணை!

திறக்கப்பட்டது கல்லணை!

டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து அக்டோபர் 2 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர் நேற்று இரவு கல்லணை வந்து சேர்ந்தது. இதையொட்டி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி கல்லணையில் இன்று (அக். 5) காலையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பாரதிமோகன், மாவட்ட ஆட்சியர்கள் (தஞ்சை) அண்ணாதுரை, (நாகை) சுரேஷ்குமார், (திருவாரூர்) நிர்மல்ராஜ், (திருச்சி) ராஜாமணி, (அரியலூர்) லெட்சுமி பிரியா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்புப் பொறியாளர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி, சேகர், ராஜேந்திரன், ஜெயராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசாமி, எம்.ஜி.எம். சுப்பிரமணியம், ராம.ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இணைந்து கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்தனர். விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் விவசாயத்திற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றில் 4 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் மொத்தமாக 17 லட்சம் ஹெக்டர் ஏக்கர்கள் விவசாய நிலங்கள் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்லணை திறக்கப்பட்டதும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆற்றில் மலர்கள், நெல் விதைகளைத் தூவினர். “சம்பா சாகுபடி தொகுப்பு திட்டத்துக்காக 41.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதைப் பெற்று சம்பா சாகுபடியைச் செய்து நிறைந்த விளைச்சல் கிடைக்கப் பாடுபட வேண்டும்” என்று அமைச்சர் துரைக்கண்ணு இந்த நிகழ்வில் பேசுகையில் கூறினார்.

கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சிறப்பாக இருக்க வாய்ப்பிருப்பதாக டெல்டா பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon