மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

யுவராஜ் சிங்கின் நல்ல உள்ளம்!

யுவராஜ் சிங்கின் நல்ல உள்ளம்!

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியைப் பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தற்போது சமூகக் களத்திலும் தனது பங்களிப்பைத் தொடங்கியுள்ளார்.

`யு வி கேன்' என்ற அறக்கட்டளை யுவராஜ் சிங்கால் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒப்போ மொபைல், அப்போலோ மருத்துவமனை, மேக்ஸ் மருத்துவமனை, ஃபார்டிஸ் மருத்துவமனை, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜெட் ஏர்வேஸ், டெல்லி டேர் டெவில்ஸ் கிரிக்கெட் அணி இவையனைத்தும் இந்த அறக்கட்டளையின் பங்குதாரர்களாக உள்ளனர். தற்போது இமாசலப்பிரதேசத்திலுள்ள சூலினி பல்கலைக்கழகத்தின் உதவியோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு மையத்தை யுவராஜ் சிங் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், "புற்றுநோய் அறக்கட்டளை மூலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகப் பணம் திரட்டுவது மிகவும் கடினமான விஷயம். இதில் இன்னும் நிறைய வீரர்கள் சேர முன்வர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அது ஒருபுறம் இருக்க, தற்போது பல்கலைக்கழகங்களின் துணையுடன் விழிப்புணர்வு மையம் துவங்கியுள்ளேன். இதன் மூலம் நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என நம்புகிறேன்" என்றார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், 2007ஆம் ஆண்டு T-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். கடந்த 2011இல், இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். இதனிடையே புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து இளைஞர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்பவர்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon