மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

தாதா தற்கொலை!

தாதா தற்கொலை!

தாதா ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். கள்ளச்சாராயத் தொழிலில் பிரபலமாக இருந்த சக்கரவர்த்தி என்பவருக்குத் தொழிலில் ஒத்தாசை செய்யும் நபராகச் சேர்ந்த ஸ்ரீதர் பின்னர் தனக்கென தனி சாராய சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்திக்கொண்டார். சாராயத்தொழிலில் இருந்து மெல்ல, ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் அவரது கவனம் திரும்பியது . தொழில்போட்டி காரணமாக பல்வேறு கொலைகளைச் செய்ததால் காஞ்சிபுரத்தைத் தாண்டி தமிழகம் முழுவதும் அவரது பெயர் தெரியத்தொடங்கியது. அரசியல்வாதிகள் உடனான நட்பு அவரை மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டியது.

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் வசூல் செய்ய தொடங்கினார். வணிக வளாகம், குடியிருப்பு போன்றவற்றை மிரட்டிக் குறைந்த விலைக்கு வாங்கினார். பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஸ்ரீதர் மீதான பயம் காரணமாகப் போலீசுக்கு செல்லாமல் மவுனமாக இருந்தனர். கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என இவர் மீது 45க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல முறை குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீதரின் அட்டூழியங்கள் அதிகரித்ததால் அவரை அடக்க போலீசார் திட்டமிட்டனர். அவரைக் கைது செய்து என்கவுண்டர் செய்வதற்காக போலீசார் ஒருமுறை முயன்றபோது, சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைந்து சேதப்படுத்தினார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர். இதுபோல், பலமுறை, போலீசாரின் என்கவுண்டர் திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் ஸ்ரீதர் தப்பித்துள்ளார்.

ஒருகட்டத்தில், சிக்கல் அதிகரிக்கவே, துபாய்க்குத் தப்பி சென்றார். அங்கிருந்தபடியே தனது ஆட்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து, ஆட்களை மிரட்டி இடம் வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதற்காகப் பலரை மாத சம்பளத்திற்கு அவர் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் ஏ.எஸ்.பியாக இருந்த ஸ்ரீநாத், எப்படியும் ஸ்ரீதரை பிடித்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதுடன். அவரால் மிரட்டிப் பறிக்கப்பட்ட சொத்துகளை உரியவர்களிடம் சேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஸ்ரீநாத் ஈடுபட்டார். ஸ்ரீதரின் மனைவி, மகன் ஆகியோரிடமும் விசாரிக்கப்பட்டது. இண்டர்போல் போலீசார் மூலமும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கம்போடியாவில் சயினைட் அருந்தி ஸ்ரீதர் நேற்று(அக்.4) தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் . போலீசார் நெருங்கிவிட்டனர், எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் புருஷோத்தமன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ’ ஸ்ரீதர் என்னைத் தொடர்புகொண்டு, நான் மன உளைச்சலில் உள்ளேன். நான் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நான் அவரைச் சமாதானம் செய்தேன். சிறிது நேரத்துக்குப் பின் அவரை அழைத்தபோது போனை எடுக்கவில்லை. பின்னர் அவரது சமையல்காரன் என்னைத் தொடர்புகொண்டு ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon