மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

டெங்கு: கஷாயம் குடித்தவர் பலி!

டெங்கு: கஷாயம் குடித்தவர் பலி!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க வீட்டில் கஷாயம் காய்ச்சிக் குடித்த ஒருவர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மூவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசும், பொதுமக்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் காரணமாகவும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

மேலும் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளப் பொதுமக்கள் வீடுகளில் கஷாயம் தயாரித்துக் குடித்துவருகின்றனர். அரசு சித்த மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களிலும் நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டுவருகிறது. நோயின் பாதிப்பிலிருந்து தப்புவதற்காக, இலவசமாக விநியோகிக்கப்படும் இந்தக் கஷாயத்தைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் குடித்துவருகின்றனர். இது தவிர, நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான பொடியை அரசு சித்த மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் மருந்துக் கடைகளிலும் நிலவேம்புக் கஷாயம் தொடர்பான பொடிகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தியும் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே கஷாயம் தயாரித்துக் குடிக்கின்றனர். ஒரு சிலர், தூதுவளை, பப்பாளி, அருகம்புல், சுக்கு உள்ளிட்ட பொருள்களைத் போட்டுக் காய்ச்சிக் கஷாயம் செய்து குடிக்கிறார்கள். இந்நிலையில் நெல்லை மாவட்டம் ஊத்துமலைப் பகுதியைச் சேர்ந்த ஆபிரஹாம் பாண்டியன் என்பவர், தனது வீட்டில் இதேபோல கஷாயம் தயாரித்துக் குடும்பத்துடன் குடித்துள்ளார்.

ஆபிரஹாம் பாண்டியன், அவரது மருமகள் செல்வராணி, பேத்திகள் 5 வயது ஞானராணி, இரண்டரை வயதுள்ள ஜெயசீலா ஆகியோர் கஷாயத்தைக் குடித்துள்ளனர். அந்த மருந்தில் அவர்கள் சேர்த்த ஏதோ ஒரு பொருள் ஒவ்வாமை ஏற்படுத்தியதால், நால்வருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கஷாயம் குடித்த ஆபிரஹாம் பாண்டியன் திடீரென மயங்கி விழுந்து பலியானார். அவரது மருமகள் மற்றும் பேத்திகள் உள்ளிட்ட மூவரும் ஆபத்தான நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்தக் கஷாயத்தில் சேர்க்கப்பட்ட பொருள்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon