மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

ஐ.நா.வுக்குக் கண்டனம்!

ஐ.நா.வுக்குக் கண்டனம்!

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங்கை, உலக கழிப்பறை தின பிரசாரத்தில் ஈடுபடும்படி ஐ.நா. அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்டபோது ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்துக்கு முக்கிய காரணமாக விளங்கினார் எனக் கூறி ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது, இவர்கள் இருவரையும் கழிப்பறை தினம் குறித்த பிரசாரத்தில் ஈடுபடும்படி ஐ.நா. சபை அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவ.19ம் தேதி சர்வதேச கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், கழிவறையின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு கழிவறை தினத்தின்போது, மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடும்படி ராம் ரஹீம் மற்றும் அவரது மகள் ஹனிபிரீத்துக்கு ஐ.நா. சபையின் அங்கமான யூ.என். வாட்டரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. பாலியல் வழக்கில் தண்டனை பெற்று குர்மித் சிறையில் உள்ள நிலையில் இது தெரியாமல் ஐ.நா. சபை அழைப்பு விடுத்துள்ளதற்கு ட்விட்டர்வாசிகள் கண்டனம் தெரிவித்தனர். பலர் இது தொடர்பாக கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்த ட்விட் நீக்கப்பட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹனிபிரீத்தை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று (அக்.4) அனுமதியளித்துள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon