மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

வாக்கி டாக்கி ஊழல்!

வாக்கி டாக்கி ஊழல்!

மற்ற துறைகளில் ஊழல் நடந்தால் காவல் துறைக்குச் செல்லலாம், காவல் துறையிலேயே ஊழல் நடந்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

“தமிழக ஆட்சியில் ஒரு குறையைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...’’ என்று முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள்வரை பேசிவருகிறார்கள். இந்நிலையில், தமிழக காவல் துறையில் வாக்கி டாக்கி வாங்குவதில் முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்கும்படி காவல் துறை தலைமை இயக்குனருக்கு உள்துறைச் செயலர் கடிதம் எழுதியிருக்கிறார்.

காவல் துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பித் தமிழக காவல் துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டிதான் டாக்டர் ராமதாஸ் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி ராமதாஸ் இன்று ( அக்டோபர் 5) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வாக்கி டாக்கி ஒப்பந்தம் பற்றிய தகவல்களை விரிவாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூஷன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியிருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரினால்தான் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்துவிட்டுப் புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டும். இது தான் நிர்வாக நடைமுறை.

ஆனால், வாக்கி டாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தைக் காவல் துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.

“2017-18ஆம் ஆண்டில் காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4000 வாக்கி டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்தம் வழங்கியது மிகப் பெரிய விதிமீறலாகும். தமிழக அரசு ஒதுக்கிய ரூ.47.56 கோடியில் 10, 000 வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி டாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம். ஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது” என ராமதாஸ் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார்.

“காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதென்பது தகவல் தொடர்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அதைத் தாண்டி மாநிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகச் செயல்படாமல் அடிப்படைத் தகுதிகள்கூட இல்லாத நிறுவனத்திற்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருந்திருக்கிறது. காவல் துறை தலைமை இயக்குனரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு மாநில உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருப்பதுதான் இதில் ஊழல் நடந்திருப்பதற்கான முதல் கட்ட ஆதாரம். எனவே, காவல் துறைக்கு வாக்கி-டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுபற்றி சி.பி.ஐ.விசாரணை செய்ய வேண்டும்’’ என்று ராமதாஸ் கோரியிருக்கிறார்.

காவல் துறை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையில் இருக்கிறது. இந்நிலையில் வாக்கி டாக்கி டெண்டரில் முறைகேடு என்று கிளம்பியிருக்கும் இந்த விவகாரத்தால் இது முதல்வருக்கான புதிய நெருக்கடியாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon