மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

சீன ஓபன்: ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!

சீன ஓபன்: ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவாவுடன் (ரஷ்யா) மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹாலெப், 6-2 என முதல் சுற்றை கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாம் சுற்றிலும் 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தப்போட்டி 72 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சமீபத்தில் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் ஷரபோவாவிடம் அடைந்த தோல்விக்கு ஹாலெப் பழி தீர்த்துக் கொண்டார். இதுவரை ஷரபோவாவுக்கு எதிராக 8 முறை மோதியுள்ள ஹாலெப் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ ஜோடி, சீனாவின் மோ-ஹின் காங் மற்றும் ஜீ ஷாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று போபண்ணா ஜோடி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி காலிறுதியில் பின்லாந்தின் ஹென்றி - ஆஸ்திரேலியாவின் பீர்ஸ் ஜோடியை இன்று (அக்டோபர் 5) எதிர்கொள்கிறது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon