மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

கோதுமை இறக்குமதி வரி உயர்த்தப்படுமா?

கோதுமை இறக்குமதி வரி உயர்த்தப்படுமா?

கோதுமைக்கான இறக்குமதி வரியை 20 முதல் 25 சதவிகிதம் வரை மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே வரியை உயர்த்தாவிட்டால் உள்நாட்டு விவசாயிகள் அதிகம் பாதிப்புறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை அரசு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உள்நாட்டில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. 2016-17 (ஜூலை - ஜூன்) வரையிலான காலத்தில் 98.37 மில்லியன் டன் அளவிலான கோதுமை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

நடப்பு பருவத்திற்கான கோதுமைப் பயிர் விதைப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் பருவத்திலாவது கோதுமைக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்று விவசாயிகள் விரும்புகின்றனர். விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும் விரும்புகிறது. எனவே இறக்குமதி அளவைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 20 முதல் 25 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வர்த்தக தரவுகளின்படி, தனியார் வர்த்தகர்கள் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 8.5 லட்சம் டன் கோதுமையை 10 சதவிகித இறக்குமதி வரியுடன் இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 1.5 லட்சம் டன் அளவிலான கோதுமை இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon