மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

கனமழைக்கு 7 பேர் பலி!

கனமழைக்கு 7 பேர் பலி!

கிருஷ்ணகிரியில் திடீர் மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக, கிருஷ்ணகிரியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்

தண்டியாக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ராதா (65) புஷ்பா(35), வசந்தகுமார் (16), சந்துரு (13), முல்லை (8) ஆகிய 5 பேரும் நேற்று (அக் 4) நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, குடிசை வீட்டின் மீது விழுந்தது.

இந்தச் சம்பவத்தால் உறங்கிக் கொண்டிருந்த 5 பெரும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற வருவாய் கோட்டாட்சியர் அருண், வட்டாட்சியர் கண்ணியப்பன் ஆகியோர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதுபோன்று நேற்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சல்மான் குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மழை காரணமாக நடராஜன் என்பவரது வீட்டின் சுவர் சல்மானின் வீட்டின்மீது விழுந்ததில் அவரும் அவரது மனைவி ஆயஷாவும் உயிரிழந்துள்ளனர். .

இதுபோன்று மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக் காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்களில் மக்கள் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon