மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

மழையால் முடங்கியது சுரங்கப் பணிகள்!

மழையால் முடங்கியது சுரங்கப் பணிகள்!

தொடர் மழை மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகத்தால் கோவாவில் உள்ள சுரங்க உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியதால் சுரங்கப் பணிகள் முடங்கியது. அக்டோபர் 1க்குப் பிறகு நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்து வந்தது. இதனால் கோவாவில் சுரங்கப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சர்வதேச சந்தையில் குறைந்த தரத்திலான தாதுகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் 41 சுரங்கங்கள் முழுமையாகப் பணியை நிறுத்திவிட்டன. மாநில சுரங்க மற்றும் புவியியல் துறை இயக்குநர் கிளென் கலவம்பரா கூறும்போது, "இந்த வருடம் பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் இன்னும் மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளது மற்றும் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பது தான் கவலையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குறைந்த தரத்திலான தாதுகள் விலை டன் ஒன்றுக்கு 94.5 டாலராக இருந்தது. தற்போது டன் ஒன்றுக்கு 45 முதல் 50 டாலராகச் சரிந்துள்ளது. இது தாது விற்பனை சந்தையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து ஹரேஷ் மேல்வானி என்ற தொழில்துறை வல்லுநர் கூறும்போது, " உருக்கு தயாரிப்பு ஆலைகளும், உற்பத்தியை அதிகரிக்க அதிக தரத்திலான தாதுகளை வாங்க ஆரம்பித்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கான வரி உயர்ந்துள்ளதால் 40 சதவிகித லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசு செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon