மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

சிறப்புக் கட்டுரை: சிவாஜி கணேசன் சிலையும் கருணாநிதி பெயரும்!

சிறப்புக் கட்டுரை: சிவாஜி கணேசன் சிலையும் கருணாநிதி பெயரும்!

ப்ரியன்

சுமார் ஐம்பது வருட காலம் தமிழ் திரைப்படவுலகில் தனது நடிப்பின் மூலம் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளத்தில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா சர்ச்சையுடன் முடிந்திருப்பது மட்டுமல்லாமல், மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 285 திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் சிவாஜியின் மணி மண்டபத்தை முதல்வர் திறக்காதது சர்ச்சையானது.

"தேசிய அளவில் பெரும் தலைவர்களை அழைத்து லட்சக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் ஆரவாரத்தோடு திறந்திருக்கப்பட வேண்டிய மணி மண்டபத்தை ஏதோ கடமைக்காகத் திறந்துவைத்தது போலிருக்கிறது" என்ற புலம்பல்கள் சிவாஜி ரசிகர்களிடமிருந்து கேட்கின்றன. இது ஒரு பக்கமென்றால், மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலையின் பீடத்தில் கருணாநிதி பெயரில்லாதது தொடரும் சர்ச்சையாகிவிட்டது. கருணாநிதி அவர்களால் கடற்கரை காமராஜர் சாலையில் திறந்து வைக்கப்பட்ட சிலை, "போக்குவரத்திற்கு இடைஞ்சல்" என்று காரணம் காட்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்பட்டு, இப்போது மணி மண்டபத்துக்குள் நிறுவப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அரசு நாணயமான அரசாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சிலையைத் திறந்தபோது பீடத்தில் கருணாநிதியின் பெயரைத் தாங்கியிருந்த கல்வெட்டையும் மணி மண்டபத்தில் சிலையின் கீழே பதித்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாக சொல்லும் இவர்களிடம் அந்த நாணயத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.

"இல்லை… சிலை முன்னாலேயே திறக்கப்பட்டது; பின்னால் திறக்கப்படும் மண்டபத்தில் வைக்கப்படும் அதே சிலையில் பழைய கல்வெட்டு இடம்பெறுவது சரியாக வராது" என்ற வாதம் வைக்கப்படுமானால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. "காமராஜர் சாலையில்........ அன்று கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிலை" என்று புதிய கல்வெட்டைப் பீடத்தில் பதித்திருக்கலாம். ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படைக் கட்டுமானங்கள் ஆகியவற்றை முடக்குவதிலும் பெயர் மாற்றுவதிலும் சிறப்புக் கவனம் செலுத்திவந்த ஜெயலலிதாவின் சிஷ்யர்களிடம் இந்தக் குறைந்தபட்ச நாணயத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது.

அதைவிட வேதனை என்னவென்றால், திறப்பு விழாவில் பேசிய சிவாஜியின் மகன் பிரபு, "கருணாநிதியின் பெயர் ஒரு ஓரத்திலாவது இருந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம்" என்றதுதான். திட்டமிட்டு கருணாநிதியின் பெயரை நீக்கிய இந்த ஆட்சியாளர்களிடம் பிச்சை கேட்பதுபோல் "ஓரத்திலாவது அவரது பெயர் இருந்தால் சந்தோஷப்படுவோம்" என்று சொன்னது கடைந்தெடுத்த கோழைத்தனம். இது கருணாநிதியை அவமதிக்கும் பேச்சு. கலைஞருக்கும் சிவாஜிக்கும் உள்ள நெருக்கத்தை விவரித்து "பீடத்தில் கருணாநிதியின் பெயர் இருக்க வேண்டும்" என்று தைரியமாக அல்லவா பிரபு முழங்கியிருக்க வேண்டும்.

மணி மண்டபம் கட்டிய தமிழக அரசுக்கு சிவாஜி குடும்பம் நன்றியோடு இருக்க வேண்டியதுதான். ஆனால், உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய கடமையும் பிரபுவுக்கு உண்டு. சர்ச்சை வேண்டாம் என்ற நோக்கம் சரிதான்; ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சரியான தருணத்தில் சொல்ல வேண்டும். "இன்றோ நாளையோ" என்று ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்த அரசைப் பார்த்து (பயந்து!) உண்மையை உரக்கப் பேச பிரபு தயங்குவது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது.

கமல் சொன்னது போல "எத்தனை அரசுகள் வந்தாலும், எத்தனை முதல்வர்கள் வந்தாலும் சிவாஜியை மதித்தே ஆக வேண்டும்" என்பதுதான் உண்மை. அந்த விழாவில் ஒரு ஆறுதல் என்னவென்றால் "சிலையை உருவாக்கக் காரணமான டாக்டர் கலைஞருக்கு நன்றி" என்று ரஜினி பேசியது தான்.

ஜெயலலிதா திறந்துவைத்திருப்பாரா?

இன்னும் சிலர் (நடுநிலையாளர்கள்போல் பேசும் ஆளும் கட்சி அனுதாபிகள்) "ஜெயலலிதா இருந்திருந்தால் அவரே மண்டபத்தைத் திறந்து வைத்திருப்பார்" என்று சொல்கிறார்கள்.இந்த கருத்து எந்த அளவு சரி? அதைத் தீர்மானிக்க வேண்டுமானால் சில பழைய நிகழ்வுகளுக்குள் புகுந்து வர வேண்டும். திரைத் துறையில் இருந்ததால் சிவாஜியும் ஜெயலலிதாவும் நெருங்கிப் பழகியவர்கள் என்பது தெரிந்த விஷயம். ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு சிவாஜி குடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம் குடும்ப உறவாகவும் மாறினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வியடைந்து வழக்குகள், சிறை என்று அவர் சந்தித்தபோது இந்தக் குடும்ப உறவில் விரிசல்கள் விழத் துவங்கின.

2001இல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். சிவாஜி அதே வருடம் ஜூலை மாதம் மரணமடைந்தார். ஜெயலலிதா, சுதாகரனை வளர்ப்பு மகன் அந்தஸ்திலிருந்து கழற்றிவிட்டது மட்டுமல்லாமல் போதைப் பொருள் வழக்கில் அவரைச் சிறையிலும் தள்ளினார். இதனால் சிவாஜி குடும்பம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. சிவாஜி உயிருடன் இருக்கும்போதே "சுதாகரனைக் குறிவைத்துச் சில நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கவிருக்கிறார்" என்ற தகவல் சிவாஜியைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவுக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் இடைவெளி அதிகமாகியது. 2001 முதல் 2006 வரை பதவியிலிருந்த ஜெயலலிதா, சிவாஜி நினைவாக எதுவும் செய்யவில்லை. 2006இல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோதுதான் அவரால் சிலை நிறுவப்பட்டது.

"மணி மண்டபத்துக்கு அப்போதே ஜெயலலிதா நிலத்தை ஒதுக்கி நடிகர் சங்கத்திடம் கொடுத்துவிட்டார் "என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் நடிகர் சங்கம் கடன் சுமையில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்பதும் அதனால் மணி மண்டபம் கட்ட முடியாது என்பதும் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா நினைத்திருந்தால் 2001 - 2006 காலகட்டத்தில் அவர் ஆட்சியிலிருந்தபோதே, அந்த ஐந்து வருட காலத்தில் அரசு செலவில் மணிமண்டபமோ, சிலையோ அமைத்திருக்கலாம்.

இது ஒரு பக்கம் இருக்க 2011இல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் "காந்தி சிலையை சிவாஜி சிலை மறைக்கிறது" என்று ஒரு சமூகநலத் தொண்டர் வழக்கு போட்டார். அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சென்னை காவல் துறை "சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது" என்று அந்த வழக்கில் இணைந்துகொண்டது. நிச்சயமாக ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் காவல் துறை நீதிமன்றத்தில் இதுபோலச் சொல்லியிருக்காது.

உண்மையில் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? "கடற்கரை உள்வட்டச் சாலையில் சிலையை வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் (தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்பதும் தெரிந்த விஷயம்). "எப்படியாவது சிவாஜி சிலையை அந்தப் பகுதியிலிருந்து எடுக்க வேண்டும்" என்ற உள்நோக்கம் மட்டுமே வெளிப்பட்டது என்றே சொல்ல வேண்டும். "கருணாநிதி வைத்த சிலை "என்பதைத் தவிர பெரும்பான்மையோர் ஊகிப்பதுபோல பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணமும் அதற்கு இருக்கலாம்.

சிவாஜிக்குத் தகுந்த மரியாதையும் அங்கீகாரமும் கொடுக்க முழு மனதில்லை; அதே சமயம் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடுவோம் என்ற தயக்கமும் ஜெயலலிதாவுக்கு இருந்திருக்கிறது. எனவே இந்தச் சூழலில், "ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரே மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார் என்ற வாதத்துடன் உடன்பட முடியாது. இந்த அடிப்படையில் பார்த்தால் ஊசலாடிக்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி மணிமண்டபத்தைத் திறந்து வைக்காததிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், குறைந்தபட்ச நேர்மையையும் நாணயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிவாஜி சிலையின் பீடத்தில் மீண்டும் கருணாநிதியின் பெயரை பதிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீடத்தில் கருணாநிதி பெயர் ஏன் இல்லை"? என்று கேட்டால், இப்போது அதிமுக அமைச்சர்களும் அனுதாபிகளும் "குமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கும்போது எம்ஜிஆர் பெயரை மறைத்தது ஏன்?" என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். எதோ புத்திசாலித்தனமாகக் கேட்பதுபோல இருக்கிறது அல்லவா! இப்படிக் கேட்டதன் மூலம் திருவள்ளுவர் சிலையை நிர்மாணித்ததில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பங்களிப்பு பூஜ்யம் என்று சொல்வதற்கான வாய்ப்பை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். "குமரிக் கடல் பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்" என்று 1975இல் கருணாநிதியிடம் முதலில் மனு கொடுத்தவர் விவேகானந்தா கேந்திராவின் தலைவர் ஏக்நாத் ரானடே. அந்த வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு கருணாநிதி நடவடிக்கை எடுப்பதற்குள் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1977இல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார். 1979இல் மொரார்ஜி தேசாய், எம்ஜிஆர் கலந்து கொண்ட விழாவில் சிலைக்கு "அடிக்கல்" நாட்டப்பட்டது. ஆனால், அதன் பின் 1987 டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறையும்வரை சிலையை நிறுவ எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.1989-91இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதிதான் சிலை செய்ய ஸ்தபதியை நியமித்தது மட்டுமல்லாமல் பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கினார். 1991 ஜனவரியில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதால் பணிகள் நின்று போயின.

இந்த நிலையில் 1991-96இல் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 1996இல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன்தான் மறுபடி நிதி ஒதுக்கப்பட்டு 1997இல் சிலை உருவாக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து பணி நடந்து 2000ஆவது வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி கருணாநிதியால் சிலை திறக்கப்பட்டது. இதுதான் குமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைந்த வரலாறு.

"அடிக்கல்" நாட்டியதோடு இந்த விவகாரத்தை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள். அவர்கள் காட்டிய அக்கறை அவ்வளவுதான். மேலும் பொதுவாகவே கட்டிடங்கள், பாலங்கள் ஆகியவற்றுக்குத்தான் அடிக்கல் நாட்டும் வழக்கம் உண்டே தவிர சிலைகளைப் பொறுத்தமட்டில் ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்குவார்கள். அவ்வளவுதான். அந்த வகையில் சிலை திறக்கும்போது யார் கலந்துகொண்டாடார்களோ அவர்கள் பெயர் தான் பீடத்தில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கும். சிலைகள் திறப்பைப் பொறுத்தமட்டில் இதுதான் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருவது. சில இடங்களில் விதிவிலக்காக மரபு மீறப்பட்டிருக்கலாம். எனவே, இந்தச் சிலை விவகாரத்துக்கும் சிவாஜி சிலை விவகாரத்துக்கும் முடிச்சுப் போடக் கூடாது.

சிவாஜி சிலை கருணாநிதியால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டது. அதே சிலையை மற்றொரு இடத்தில் எடுத்து வைக்கும்போது பீடத்தில் இருந்த கல்வெட்டையும் சேர்த்து வைக்க வேண்டும். அது தான் அடிப்படை தர்மம்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon