மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

மெர்சல் படத்துக்கு தொடரும் தடை!

மெர்சல் படத்துக்கு தொடரும் தடை!

மெர்சல் படத்தை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், செப்டம்பர் 23 ஆம் தேதி 'மெர்சல்' என்ற தலைப்பை பயன்படுத்தியதற்கு எதிராக ராஜேந்திரன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கையடுத்து, படத்தை விளம்பரம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டு, ஏஆர் பிலிம் ஃபாக்டரி சார்பில் ராஜேந்திரன் தயாரித்த படத்துக்கு 'மெர்சலாயிட்டேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பை ஒத்த ‘மெர்சல்’ என்ற தலைப்பை தற்போது விஜய் நடித்துள்ள படத்துக்கு வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தக குறியீடு (டிரேட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 3ஆம் தேதி வரை 'மெர்சல்' என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் நேற்று (செப்.04) விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பை நாளைக்கு (அக்.06) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை 'மெர்சல்' படத்தை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon