மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

லைவ் ரிப்போர்ட்: அவமதிக்கப்படும் கபடி ரசிகர்கள்!

லைவ் ரிப்போர்ட்: அவமதிக்கப்படும் கபடி ரசிகர்கள்!

சிவா

தமிழ் தலைவாஸ் அணிக்கு மட்டுமல்ல, ப்ரோ கபடி லீக் போட்டிகளை நேரில் பார்க்க நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் அத்தனைப் பேருக்கும் கடந்த சில நாட்கள் மகிழ்வானதாக இருக்கவில்லை. வரிசையாகத் தோல்விகளைத் தமிழ் தலைவாஸ் அணி சுவைத்திருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்பு, போட்டிகளைக் காண நேரில் செல்லும் ரசிகர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது .

சென்னையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் தொடங்கிய முதல் நாள் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எப்படி இருந்தது என விரிவாக எழுதியிருந்தோம். அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளிலும்கூடத் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியைத் தழுவியிருந்ததால் ரசிகர்களின் மனநிலையைப் பார்க்க மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு விசிட் கொடுத்தோம்.

கேட் எண் நான்கில் வாகனங்களை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருந்ததால், நேராக நான்காம் எண் கேட்டுக்குச் சென்றபோது காலியாக இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் ஏற்கனவே வண்டிகள் இருக்கும் இடத்தில் எங்காவது வண்டியை நிறுத்தச் சொல்ல அதற்கெனத் தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடன் மல்லுக்கட்ட மனமில்லாமல், ஒரு ஓரத்தில் வண்டியை சாய்த்துவிட்டு (எப்படியும் திரும்ப வரும்போது சாய்ந்துதான் கிடக்கும்) பக்கத்து கேட்டுக்குள் நுழையலாம் என்று பார்த்தால், அங்கு விவிஐபிக்களுக்கு மட்டும்தான் அனுமதி என 20 பேர் அடங்கிய குழு ஒன்று தடுத்தது. முதல் நாள் போட்டிக்குத் துணை முதல்வர், சச்சின்

டெண்டுல்கர் உட்படப் பல பிரபலங்கள் வந்ததால் அன்றைய கட்டுப்பாடுகளை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதாக இல்லை. ஆனால், வெறும் ரசிகக் கூட்டம் மட்டுமே வந்திருக்கும் இந்தப் போட்டிகளுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடு எனக் கேட்டபோது மூவாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய விவிஐபிக்கள் மட்டுமே இவ்வழியாக அனுமதிக்கப்படுவார்கள் எனச் சொன்னார்கள் இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவரும் EventsNow நிறுவனத்தின் பணியாளர்கள். அதாவது ரூ. 750, ரூ. 450, ரூ. 200 பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டர் கடந்து சென்று கேட் எண் 1 வழியாக உள்ளே செல்ல வேண்டும் எனப் பணிக்கப்படுகிறார்கள்.

சரி, அங்கு என்ன நடைபெறுகிறதெனப் பார்க்கச் சென்றால் கபடிப் போட்டியில் எதிரணியினரிடம் சிக்கிக்கொண்ட ரைடர் தப்பித்து ஓடி வருவது போல மக்கள் கூட்டம் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டிகளை தள்ளிக்கொண்டு கேட்டைக் கடந்துகொண்டிருந்தனர். இந்த சூழல் அப்படியே வாடிவாசலில் பாய்ந்து வரும் காளையைப் பிடிக்க நிற்கும் இளைஞர்களை நினைவுபடுத்தியது. ஆனால், கையில் குழந்தைகளுடனும், சிறுவர்கள்/சிறுமிகளைக் கையில் பிடித்துக்கொண்டும் நேரமாகிவிட்டதெனக் கத்திக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. மக்களைத் தடுத்துக்கொண்டிருந்தவர்கள், பொறுமையா வாங்க. லேட்டா வந்தது உங்க தப்பு. என குரல் கொடுக்க, பின்னாலிருந்து ஒருவர் பெரிய கேட்டைத் திறந்தா ஒரே நேரத்துல நூறு பேர்கூட போகலாம் என பதிலளித்தார். அங்கு கூடியிருந்த 200 தலைகளும் அதே கேள்வியைக் கேட்கத் தொடங்கியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

டைட்டானிக் கப்பலிலிருந்து தப்பிக்க ரோஸின் காதலன் குழந்தையத் தூக்கிக்கொண்டு சென்றதுபோல, அருகிலிருந்தவர் மகளைத் தூக்கிக்கொண்டு பல இடிபாடுகளுக்குப் பிறகு அந்த கேட்டைக் கடந்தபோது நாமும் அவரைப் பின்பற்றிச் சென்று கேட்டைத் தாண்டினோம். அங்கு கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டோம். குழந்தையின் பால் புட்டி முதற்கொண்டு வாயிற்காவலர்களால் பறிமுதல் செய்யப்படுகிறது. சுடு தண்ணி வைத்திருந்த பிலாஸ்க், பிஸ்கெட் பாக்கெட், நாம் மாட்டியிருந்த பை, ஹெல்மெட் என அனைத்தும் கையிலிருந்து பிடுங்கி எறியப்படுகின்றன. புது ஹெல்மெட்டை சேற்றில் வீசியதால் வெகுண்டு, என்ன பாஸ் எனக் கேட்டதும், எங்களுக்கு கொடுத்திருக்க ஆர்டர் எதுவும் அனுமதிக்கக் கூடாது சார். டிக்கெட்டுக்கு பேக் சைட் பார்க்கலயா? ஹெல்மெட் எல்லாம் நாட் அலவுட் என்கிறார்கள். ‘சரி இவற்றின் பாதுகாப்புக்கான உத்திரவாதம் என்ன?’ என்று கேட்டால், இங்கதான் கெடக்கும். வரும்போது பார்த்து எடுத்துக்கொண்டு போகலாம் என்கிறார்கள். உள்ளே சென்ற கதையே இவ்வளவு நேரமாக சொல்கிறேன் எனக் கோபப்படலாம். ஆனால், உள்ளே செல்வதற்கான நேரம் மட்டும் 40 நிமிடங்களை எடுத்துக்கொண்டது.

போட்டியைப் பார்க்கும் ஆர்வத்தில் நேராக அரங்கத்துக்குச் செல்ல ஒருவர் சொல்வதையெல்லாம் ரசிகர்கள் செய்துகொண்டிருந்தனர். அவர் சொல்லாமலே, போட்டிக்கு வீரர்கள் ஆயத்தமானதும் கைதட்டத் தொடங்கினார்கள். சென்னை மக்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. மொத்தமாக விளையாடிய இரண்டு போட்டிகளில் பங்குபெற்ற நான்கு அணிகள் பாய்ண்டு எடுத்தபோதும் கைதட்டுகிறார்கள். தமிழ் தலைவாஸ் என்று வரும்போது மட்டும் எப்போதும்போல கொஞ்சம் எக்ஸ்ட்ரா. இதில் கடும்போட்டி நிலவுவது அஜய் தாக்கூர், லீ ஆகியோரிடையேதான்.

அரங்கத்தில் கூடியிருக்கும் ரசிகர்கள் கைதட்டும் அதிர்வு நம்மைக் கடந்து செல்லும்போது கொடுக்கும் எனர்ஜி சாதாரணமானதல்ல. தொலைக்காட்சியில் கபடி போட்டிகளைப் பார்க்கும்போது, ரசிகர்களின் சத்தத்தை மொத்தமாகத் தணிக்கை செய்துவிடுகிறார்கள். எனவே நேரில் போட்டியைப் பார்ப்பது சிறந்தது என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு எதிர்கொள்ளும் துயரத்தின் அளவைப் பார்க்கும்போது இதே ஸ்டேடியத்தில் ப்ரோ கபடி லீகின் இறுதி ஆட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கும் ஸ்டார் நிறுவனத்தை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

பொதுவாக ஒரு விளையாட்டு மைதானத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒன்றுகூட இல்லாமல், மக்கள் நடமாடும் எல்லா இடங்களையும் ஸ்பான்சர் நிறுவனங்களின் விளம்பரத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். எதிர்பாராத விபத்து ஏதும் ஏற்படுமாயின் மிக மோசமான பின்விளைவுகளை அந்த மைதானத்துக்குள் இருக்கும் மக்கள் அனுபவிக்கக்கூடும்.

அதிமுக அரசு 2011ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பேற்ற சிவபதி, 12 கோடி ரூபாய் நேரு உள்விளையாட்டு அரங்கை புனரமைக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் நிதியாக அளிக்கிறோம் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்த 12 கோடி ரூபாயை வைத்து என்ன செய்தார்களோ தெரியவில்லை. தரமான கழிவறையைக்கூட உருவாக்கவில்லை. வெளியேற்றப்படும் சிறுநீர், பீங்கானில் விழுந்து மீண்டும் கால் மீதே விழுகிறது. மாநிலமே நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நோக்கித் திரும்பியிருக்கும் வேளையில் இது வேறு தனியாக நோயை உருவாக்க வேண்டுமா? கைகளைக் கழுவச் சென்றால் தண்ணீர் வராத பைப்புகள் ஒன்றுக்கொண்டு கோபித்துக்கொண்டு வெவ்வேறு பக்கமாக முகம் திருப்பிக்கொண்டிருக்கின்றன. உயிரோடு வீட்டுக்குப் போய்விடலாம் எனப் போட்டிகள் முடிவதற்கு முன்பே கிளம்பி வெளியே வந்தபோது ஆங்காங்கே மலைபோல குவிந்து கிடந்தன வழிப்பறி செய்யப்பட்ட பைகளும், ஹெல்மெட்களும். என் பையின் அடையாளம் தெரிந்ததால், சட்டெனப் பையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றேன். இது உங்கள் பை தானா என்று யாரும் கேட்கவில்லை. இது உங்கள் ஹெல்மெட்டா என்றும் யாரும் கேட்கவில்லை.

கூட்டம் கூடுவதற்குள் பைக்கை எடுக்கலாம் என்று சென்றால், அங்கு நீரில் மூழ்கிக் கைகளை மட்டும் வெளியில் நீட்டித் தத்தளித்துக்கொண்டிருந்த பைக்கைக் காண நேர்ந்தது. பைக்கின் சைட் ஸ்டேண்ட் போட்டிருந்த இடம் மழை நீரில் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வண்டியை சைட் ஸ்டேண்டின் நுனியில் நிற்கவைத்திருந்தது. படத்தில் குண்டுகளை செயலிழக்கச்செய்யும் வீரரைப் போல வண்டியை அதிர்வு கொடுக்காமல் நிமிர்த்தி தள்ளிக்கொண்டே வெளியில் வந்து சேர்ந்தோம் நானும் நண்பரும்.

ப்ரோ கபடி லீகில் முதல்முறையாக விளையாடிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு, இந்த சீசனில் சேரும் ஒவ்வொரு ரசிகரும் ஒரு சொத்தாகப் பார்க்கப்பட வேண்டியவர். தங்கள் அணியின் தோல்வியைப் பொருட்படுத்தாமல், அவர்களை உற்சாகப்படுத்த, பணம் கொடுத்து டிக்கெட் புக் செய்து, அரங்கு தெளிவாக தெரியாத தூரத்தில் உட்கார்ந்தாலும், குரல் மூலம் ஆதரவளித்துவரும் ரசிகர்களை இப்படியெல்லாம் சோதித்து நேரில் போட்டியைப் பார்ப்பதையே கெட்ட கனவாக நினைத்து மறக்கும்படி செய்வதற்கான முயற்சியாகவே இந்த ஏற்பாடுகளைப் பார்க்கும்போது தெரிகிறது. விழா ஏற்பாட்டாளர்களுக்கு இந்த நிகழ்வு இல்லையென்றால் வேறு நிகழ்வு கிடைக்கும். ஆனால், தமிழ் தலைவாஸ் அணிக்கு என்றும் ஒரே ரசிகர்கள்தான். அந்த ரசிகர்கள்தான் புகழைத் தாங்கி நிற்பார்கள். கோப்பைகள் பெயர்களை மட்டுமே தாங்கி நிற்கும். அந்த ரசிகர்களை வதைக்காமல் போட்டிகளைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் நிர்வாகிகள் ஆவன செய்வார்களா?

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon