மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

சிறப்புக் கட்டுரை: பெண்ணை மட்டம் தட்டுவதுதான் பேராண்மையா?

சிறப்புக் கட்டுரை: பெண்ணை மட்டம் தட்டுவதுதான் பேராண்மையா?

அ. குமரேசன்

திரைப்பட அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் மேடைக்கு அழைக்கப்பட்ட நடிகர் தன்ஷிகா, பலரது பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தபோது, நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்தது, அதற்காக அதே மேடையில் அவர் மன்னிப்புக் கேட்டும் ராஜேந்தர் அவரை அவமானப்படுத்திப் பேசியது பற்றி சமூக வலைதளங்களில் நிறையவே விமர்சனங்கள் வந்துவிட்டன. ஒரு ஆறுதல் என்னவென்றால் எல்லா விமர்சனங்களும் ராஜேந்தரைத்தான் சாடியிருக்கின்றன. முன்பு அவக்கேடான ‘பீப்’ பாடல் விவகாரத்தில் அவருடைய மகன் சிம்புவுக்கு ஆதரவாக வரிந்துகட்டி வன்மம் பொழியப் பலர் கிளம்பியதுபோல இந்தப் பிரச்சனையில் ராஜேந்தருக்குத் துணையாக யாரும் வரவில்லை.

(ஒரு இடை விளக்கம்: ஏன் நடிகர் தன்ஷிகா என்று குறிப்பிட்டிருக்கிறேன்? நடிகை என்று ஏன் குறிப்பிடவில்லை? நடிகன் என்று சொல்வதை ஏற்கத் தயார் என்றால் மட்டுமே நடிகை என்று சொல்ல வேண்டும். இல்லையேல் எல்லாப் பாலினத்தவரையும் குறிப்பிடும் வகையில் நடிகர் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன் - தலைவர், ஆசிரியர் ஆகியவை ஓரளவுக்குப் பாலினப் பொதுச் சொற்களாக ஏற்கப்பட்டுவிட்டது போல. பெண்ணுரிமைக்காக வாதாடுவோர், பாலினச் சமத்துவ அரசியல் குறித்த இந்தப் புரிதலோடுதான் சொற்களைக் கையாள வேண்டும் என்பது என் நிலைப்பாடு.)

ராஜேந்தர் தனது அடுக்குமொழித் திறனைக் காட்டி, ‘சாரி’ சொன்ன தன்ஷிகாவிடம் “நீ கட்டிட்டு வரல சாரி, இப்ப நீ கேக்கற சாரி” என்பதாகத் தொடங்கினார். அப்புறம் அடுத்தடுத்த கணைகள்.

மேடையிலும் அவையிலும் இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருந்ததும் ராஜேந்தரின் வன்மத்திற்கு நிகரானதுதான்,

மட்டம் தட்டுவதா பெருமை

பெண்ணை எப்படி வேண்டுமானாலும் மட்டம் தட்டியே பேராண்மையை நிலைநிறுத்திவந்திருக்கிறான் ஆண். அதன் தொடர்ச்சிதான் இது. பெண்ணின் ஆடைத் தேர்வு உரிமையையும் பரிகசிப்பதில் பண்பாட்டுப் பெருமை ஒன்றுமில்லை. பெண்ணுக்கு ஏற்ற ஆடை எது என்பது பற்றிய ஒரு விவாதம் முன்னுக்கு வந்தபோது, “உன்னிடம் வம்பு செய்கிறவனைக் கால் தூக்கி மிதிக்க எந்த உடை தோதாக இருக்குமோ அதை அணிந்துகொள். பேருந்துகளை ஓடிப் பிடிக்க எந்த உடை உதவியாக இருக்குமோ அதை அணிந்துகொள்,” என்று நான் எழுதியது நினைவுக்கு வருகிறது.

நிலத்தின் விளைச்சல் பயன்பாடு மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதுவரையில் பொதுவானதாக எல்லோரும் நடமாடி உருண்டு புரண்டுவந்த நிலம், அதை வளைத்துப்போட்ட ஆண்களின் உடைமையாகியது. தனக்குப் பின் நிலம் தனது விந்துவின் வாரிசுக்கே போய்ச்சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, பெண்ணை அடிமையாக்கினான் ஆண் என்பது தொன்மை வரலாறு. அப்போதிருந்தே பெண் இந்த அடிமை வாழ்வை ஏற்கவைப்பதற்கான நடைமுறைகள் குடும்பப் போதனைகளாகவும் அதிகார பீட ஆணைகளாகவும், சமூக விதிகளாகவும், மரபு நியதிகளாகவும், நகைச்சுவை நையாண்டிகளாகவும் புகுத்தப்பட்டு வந்துள்ளன.

வாய்ச்சண்டை நடக்கிற இடங்களில் வீசப்படும் வசவுச் சொற்களில் பலவும் பெண்ணையும் பெண்ணின் பிறப்புறுப்பையும் குறிப்பனவாக இருப்பது தற்செயல் நையாண்டியல்ல. ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டியவளே பெண், அதை மீறுகிறவள் ஒழுக்கம் தவறியவளே என்ற வரையறுப்பிலிருந்து பிறந்தவைதான் இத்தகைய வசவுச் சொற்கள்.

கடவுளரும் விதிவிலக்கல்ல

இதற்கும் பக்திக் கதைகள் வழியான புத்தி புகட்டல்கள் உண்டு. பார்வதிக்கும் சிவனுக்கும் நடனப்போட்டி வருகிறது. சிவனின் அசைவுகள் அடவுகள் அபினயங்கள் முத்திரைகள் அனைத்தையும் தானும் செய்துகாட்டி அசத்துகிறார் பார்வதி, இருவரும் சம நிலையில் இருப்பதாக அவையினர் முடிவுக்கு வரப்போகிறார்கள். அப்போது சிவன் தனது ஒரு காலை செங்குத்தாக உயர்த்தித் தலையைத் தொடுகிறார். அன்றைய உடை காரணமாக அப்படிக் காலைத் தூக்க முடியாத பார்வதி வெட்கப்பட்டு அந்த அசைவைச் செய்யாமல் விடுகிறார். போட்டியில் சிவன் வென்றதாக அறிவிக்கப்படுகிறது. ஆணால் செய்ய முடிவதெல்லாம் பெண்ணால் செய்துவிட முடியாது எனக் கூறிப் பெண்ணை இரண்டாமிடத்திற்குத் தள்ளுகிற தத்துவம் இப்படி புகட்டப்பட்டது. போட்டியில் முறையாக வெற்றிபெற்றுப் போட்டியாளரை வெட்கப்பட வைப்பதற்கு மாறாக, வெட்கப்பட வைத்து வெற்றி பெறுவதில் என்ன ஆண்மை இருக்கிறதோ?

“மனைவியரே, கடவுளிடம் ஒப்படைத்துக்கொண்டதுபோல உங்கள் கணவர்களிடம் உங்களை ஒப்படைத்துக்கொள்ளுங்கள்,” என்கிறது ஒரு பைபிள் மேற்கோள். “ஒரு பெண் போதிப்பதையோ ஆணை ஆளுமை செலுத்துவதையோ அனுமதிக்க மாட்டேன், அவள் மௌனமாகவே இருந்தாக வேண்டும்,” என்று புனித பால் சொன்னதாக மற்றொரு மேற்கோள் தெரிவிக்கிறது. “ஆண்கள் பெண்களைவிட ஓரளவு உயர்வானவர்களே,” என்று குரான் கூறுவதாக இஸ்லாமிய நாடுகளில் பெண்ணுரிமைக்காகக் களம் காண்போர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆராயப் புகுந்தால் அநேகமாக எல்லா மதங்களிலும் இப்படிப் பெண்ணைக் கீழிறக்கி வைப்பதற்கான அறிவுரைகள் இருக்கும் என்றே தோன்றுகிறது.

“அவன் பார்த்துக்கொள்வான்,” “இறைவன் பரிசளிப்பான்,” என்றெல்லாம் ஆணாகவே கடவுளைச் சித்தரிக்கிறார்கள். பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டாலும் பேரதிகாரம் என்னவோ ஆண் கடவுளுக்குத்தான். மதங்களை உருவாக்கியது மட்டுமல்ல, கடவுள்களைப் படைத்ததும்கூட ஆண்கள்தான் என்பதற்கு இவை சாட்சியமளிக்கின்றன.

சாதியத் தீட்டு போலவே, பெண்ணின் மாதவிடாய்க் கால திரவப் போக்கு புனிதமற்ற அழுக்குச் செயலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே அழுக்குக்குரியவளை இழிவுபடுத்தலாம், இழிவின் அடையாளமாகவும் உருவகப்படுத்தலாம் என்ற எண்ணங்கள் கெட்டிப்படுத்தப்பட்டன.

பெண் அடையாளங்கள் இழிவின் குறியீடுகளா

யாராவது ஒரு ஆண் தலைவரையோ, ஆண் அதிகாரியையோ தாக்குவது என்றால் அவருக்கு சேலை, வளையல் அனுப்பிவைக்கிற ‘எதிர்ப்பு வெளிப்பாடு’ இத்தகைய எண்ணங்களிலிருந்து பின்பற்றப்படுகிறது. அண்மையில் கூட ‘நீட்’ எதிர்ப்பு என்ற நியாயமான போராட்டத்தையொட்டி, சிலர் தமிழக முதல்வருக்குப் புடவையும் சேலையும் அனுப்பிய நியாயமற்ற செயலைச் செய்தது பற்றிய ஒரு செய்தி வந்தது. நவீன சமூக வலைதளங்களில் செயல்படும் பல ஆண்கள் இன்றும் நவீனமாக மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். யாரையாவது தாக்கிக் கருத்திடுகிறபோது, அவருக்கு வளையல்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

அழுகை என்பது, மனதின் வலியைத் தணிக்கும் இயற்கை வடிகால். ஆனால், ஆண் அழுகிறான் என்றால் “என்ன பொம்பளை மாதிரி அழுகிறாய்,” என்று உடனிருப்போர் கேட்கிறார்கள். பொட்டைத்தனம் என்பது போன்ற ஆணாதிக்கச் சொல்லாடல்கள் இப்படித்தான் பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சொல்லாடல்களைப் பெண்களையும் பயன்படுத்த வைத்ததில் ஆணாதிக்கத்தின் வெற்றி இருக்கிறது. பெண் எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுரைகள் பெண்களின் மூலமாகவே ஊட்டப்படுகின்றன. முந்தைய தலைமுறைப் பெண்ணிடமிருந்து இந்தப் போதனைகளை வாங்கிக்கொண்ட இந்தத் தலைமுறைப் பெண், அடுத்த தலைமுறைப் பெண்ணுக்கு அதைக் கடத்துவதற்கான பக்குவத்தைப் பெறுகிறாள்.

தொடர்ந்து வேலைக்கு வராத ஒரு பெண் ஊழியரின் வீட்டிற்கு, ஏதேனும் பிரச்சினையா என்று விசாரிக்கச் சென்றிருந்தேன். அங்கே துணிமணிகள் சிதறிக் கிடந்தன. பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் பெண்ணின் அத்தை, “என்ன பொம்பளைப் புள்ள இருக்கிற வீடு மாதிரியா இருக்கு,” என்று கேட்டார். துணிமணிகளை சீராக அடுக்கிவைக்கிற பணி பெண்ணுக்கானது என்ற தலைமுறைப் போதனைதானே அந்த அத்தையின் வாயிலிருந்து வந்தது?

இப்படியான தலைமுறைப் பாடங்களைப் புறந்தள்ளத் துணிகிற புதுமைப் பெண்களுக்கு உடனே அதிகப்பிரசங்கி என்பது முதல் அடங்காப்பிடாரி வரையிலான பட்டங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மீறலைப் பாலியல் ஒழுக்கத்தோடு இணைத்துப் பேசுகிற வக்கிரமாகவும் வசவுகளும் தொடுக்கப்படுகின்றன.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்குப் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தபோது, “அவருடைய அந்தரங்க வாழ்க்கை தொடர்பான பிரச்சனையில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறதே,” என்று கூச்சமே இல்லாமல் எதிர்ப்பதிவு செய்வதற்கும் பலர் புறப்பட்டார்கள்.

புதிய தலைமுறைப் பாடங்களே இனி தேவை. அந்தப் பாடங்கள் இது பற்றிய விவாதங்களாலும் விழிப்புணர்வுப் பரப்புரைகளாலும் வீடுகளில் மாற்றுப் பண்பாடுகளாலும் கற்பிக்கப்பட வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மதுரையில் ஒரு பெண் தனது வீட்டிலேயே இந்தி, ஆங்கில வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார். நானும் சில அடிப்படைப் பயிற்சிகளுக்காக அந்த வீட்டுப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். ஆண்டு முடிவில் ஒரு சிறிய விழாவை அந்தக் குடியிருப்பின் கூட்ட அரங்கிலேயே நடத்தினோம். எனது பேச்சை நான், “நண்பர்களே, சகோதரிகளே,” என்று தொடங்கினேன். மொழி பற்றிய எனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் சக மாணவரான ஒரு பெண் என்னருகில் வந்தார். பேச்சைப் பாராட்டப்போகிறார் என்று நான் ஆவலோடு எதிர்பார்த்திருக்க அவரோ, “அதென்ன நண்பர்களே, சகோதரிகளேன்னு ஆரம்பிச்சீங்க? அப்படின்னா நண்பர்கள்னா ஆண்கள் மட்டும்தானா? பெண்கள் சகோதரிகளாக மட்டும்தான் பழகணுமா? நண்பர்களாக இருக்கக் கூடாதா,” என்று பிடிபிடியென்று பிடித்தார். அந்தக் கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருந்தது. பாலின சமத்துவச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதில், சொற்களின் பாலின அரசியலைப் புரிந்துகொள்ள முயல்வதில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்திய கேள்வி அது.

வார்த்தைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலேயே மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவதற்கான தீப்பந்தங்களில் ஒன்றாகக் கொண்டு செல்ல வேண்டிய கேள்வி இது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாலர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon