மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அதிகரிக்கும்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அதிகரிக்கும்!

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் தற்போதுள்ள நிலையிலிருந்து இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று சர்வதேச ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை அதிகரிப்பதில் 2022ஆம் ஆண்டில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை மிஞ்சும். தற்போதைய அரசு அறிக்கைகளின் படி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 58.30 கிகா வாட்டாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் இதன் அளவை 175 கிகா வாட்டாக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது. இதில் 100 கிகா வாட் மின்சாரம் சோலார் மூலமும், 60 கிகா வாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமாகவும் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே சோலார் தொழில்நுட்பத்தில் மிகக்குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதேபோல சோலார் மின் கட்டணமும் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.44 என்ற குறைந்த அளவில் உள்ளது. உலகிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலமாக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. தற்போது 360 கிகா வாட் மின்சாரம் இம்முறையில் தயாரிக்கப்படுகிறது. இது உலகளவில் 40 சதவிகிதமாகும்.

2022ஆம் ஆண்டில் இந்தியா மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியும் 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரிக்கும் என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் பயன்பாடும் 30 சதவிகிதமாக உயரும். தற்போது இதன் பயன்பாடு 26 சதவிகிதமாக உள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon