மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

OBC பிரிவினரை வகைப்படுத்தும் குழு தலைவராக ரோஹிணி !

OBC பிரிவினரை வகைப்படுத்தும் குழு தலைவராக ரோஹிணி  !

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ரோஹிணி , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்தும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே சலுகைகளை பகிர்ந்தளிப்பதில் சமமின்மை நிலவுவதால், அந்த வகுப்பினரிடையே உள்ள உட்பிரிவுகளை கண்டறிந்து மத்திய பட்டியலில் சேர்ப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, இந்த ஆய்வை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழுவை அமைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்.2ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஜி. ரோஹிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014ல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும்போதே ஆந்திர மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைமை பொறுப்பிலும் அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் பட்டம் பெற்ற அவர், பின்னர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 20 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த அவர் ஆந்திர நீதிமன்றங்களிலேயே அதிகம் பணியாற்றியுள்ளார்.

மிகவும் பின்தங்கிய சமூகத்தினர் அரசு வேலை, கல்வி ஆகியவற்றில் சலுகைகளைப் பெறுவதை இந்தக் குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும். 12 வாரக் காலத்திற்குள் பரிந்துரைகளை குடியரசுத் தலைவரிடம் அளிக்க ரோகிணி குழுவுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான விசயங்களில் ரோஹிணிக்கு ஏற்கனவே பரிச்சயம் உள்ளதால், அவரது நியமனம் இந்தக் குழுவிற்கு வலுவைத் தரும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தெரிவிக்கும் குறைகளை ஆராய்ந்து இந்தக் குழு உரியப் பரிந்துரைகளை அளிக்கும். மண்டல் ஆணையம் அளிக்கும் 27 சதவிகித ஒதுக்கீடு உரியவர்களைச் சென்றடைகிறதா என்பதைக் குழு ஆராயும். இதன் மூலம், கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள நலிவடைந்த சமூகத்தினர் தொடர்பாக அறிந்துகொள்ளவும் மத்திய அரசுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon