பாலிவுட்டில் படையெடுக்கும் பயோபிக் வரிசையில் தற்போது கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷாவும் இணையவுள்ளார். விரைவில் இவரது வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் பயோபிக்கில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
`பி. டி. உஷா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான கதையை சஜீஸ் சர்கம் எழுத, ரேவதி வர்மா இயக்க உள்ளார். இதுவரை 450க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ள ரேவதி வர்மா, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நான்கு முழு நீளப்படங்களையும் இயக்கியுள்ளார். ஏஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படத்தை பேக்வாட்டர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று வர்ணிக்கப்படும், தடகள வீராங்கனையான கேரளாவை சேர்ந்த பி. டி. உஷா, 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தின், இறுதிப் போட்டியில் 0.01 நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் ஒலிம்பிக்கில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இவர் இதுவரை “அர்ஜுனா விருது” “பத்மஸ்ரீ விருது” சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது’ போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.